ஓரணியில் தமிழ்நாடு.. ஓடிபி பெற இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..
Oraniyil Tamil Nadu: OTP விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகையில் எதற்காக கேட்கிறார்கள்? என கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது OTPயை பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது OTPயை பெற இடைக்கால தடை விதித்து மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்கின்றனர். தொடர்ந்து மொபைல் எண்ணிற்கு ஓடிபி வருகிறது. அந்த ஓடிபியை தெரிவித்ததும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. மேலும் மக்களை திமுகவில் சேர வற்புறுத்தி வருகின்றனர்.
மனுவில் சொல்லப்பட்டது என்ன?
எனவே, திமுகவினர் அரசியல் பிரசாரத்துக்காக பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விபரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும், திமுகவினர் பொதுமக்களிடம் இருந்து எந்தக் காரணத்துக்காகவும் ஆதார் விபரங்களை சேகரிக்க கூடாது என்றும், திமுகவினர் இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை உடனடியாக அழிக்கவும், பொதுமக்களிடம் திமுகவினர் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச்செயலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.
ஓடிபி ஏன் பெறப்படுகிறது – நீதிபதிகள் சரமாரி கேள்வி:
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “OTP-யை எதற்காக கேட்கிறார்கள்? OTP விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகையில் எதற்காக கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், “திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “நீங்கள் அரசு வழக்கறிஞரா? திமுக வழக்கறிஞரா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் படிக்க: அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்.. திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி..
தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும் என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்ல. இது மிகவும் ஆபத்தானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஓடிபி பெற இடைக்கால தடை:
அதனை தொடர்ந்து, வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது OTPயை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் OTP விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும் வழக்கு தொடர்பாகவும் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.