Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TVK Party: தவெக மாநாடு.. களமாட காத்திருக்கும் விஜய்.. இதுதான் ஹைலைட்!

Tamilaga Vettri Kazhagam Madurai Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெறுகிறது. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் 99 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

TVK Party: தவெக மாநாடு.. களமாட காத்திருக்கும் விஜய்.. இதுதான் ஹைலைட்!
மதுரை தவெக மாநாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 20 Aug 2025 07:52 AM

மதுரை, ஆகஸ்ட் 20: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் 2025, ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்படுவதாக தெரிவித்தார். 2024 ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடி மற்றும் கொள்கை பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் தங்களது எதிரி என விஜய் வெளிப்படையாகவே சாடினார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக முன்கள பணியாற்றி வருகின்றன.

த.வெ.க. இரண்டாவது மாநாடு

இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்னும் இடத்தில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. முன்னதாக ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27) வருவதால் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் உண்டாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் தேதி மாற்றம் செய்யப்பட்டது.

எனினும் மாநாட்டுக்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. கிட்டதட்ட 99 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் அனைத்து பணிகளையும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் இரவு, பகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Also Read:  மதுரை தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!

சுற்றுலாத்தலமாக மாறிய இடம்


கிட்டதட்ட ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் சுமார் 506 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாநாடு நடைபெறும் இடம் சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. மதுரை மாவட்ட மக்கள் குடும்பம்  குடும்பமாக வருகை தந்து அங்கு ஏற்பாடுகளை பார்வையிட்டும், ஃபோட்டோ எடுத்தும் பொழுதை போக்கி வருகின்றனர். மாநாட்டின் முகப்பில் சுமார் 100 அடி உயர கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் விஜய் ராம்ப் வாக் செல்ல மாநாட்டு மேடையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு விதமான குழுக்கள் அமைக்கப்பட்டு யாருக்கும் எந்தவித அசௌகரியமும் ஏற்பட்டு விடாதபடி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு உள்ளே செல்ல 7 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றிலும் தகர ஷெட்டிகள் தடுப்பு சுவராக அமைக்கப்பட்டிருக்கிறது. இது மாநாடு முடியும் நேரத்தில் அகற்றப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Also Read: மதுரை தவெக மாநாட்டுக்கு போறீங்களா? – வெளியான அப்டேட்!

பெண்களுக்கு தனியாக இரண்டு பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளே வருபவர்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில், திண்பண்டங்கள் வழங்கப்படுகிறது. மாநாட்டின் இரு பக்கமும் ஆம்புலன்ஸ்கள் செல்ல தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு தரையில் கீழ் குழாய் பதிக்கப்பட்டு நீர் வழங்கப்படுகிறது. விக்கிரவாண்டியில் மாநாட்டில் இடம்பெற்ற குறைகளை சரிசெய்யும் நோக்கில் இந்த மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே வரும் விஜய்.. போக்குவரத்து மாற்றம் 

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே தவெக தலைவர் விஜய் மதுரை வந்து ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மாநாட்டில் எம்ஜிஆர், அண்ணா பேனர்களின் விஜய் இடம் பெற்றிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அதேபோல் விஜயகாந்துடன் விஜய் இருப்பது போன்ற தொண்டர்களின் பேனர்களும் வைரலாகியுள்ளது. கண்டிப்பாக இந்த மாநாட்டில் விஜய் பேசப்போவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.