TVK Conference: மதுரை தவெக மாநாட்டுக்கு போறீங்களா? – வெளியான அப்டேட்!
Tamilaga Vettri Kazhagam Madurai Conference: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்பவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் வழித்தடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

மதுரை, ஆகஸ்ட் 19: மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு 2025 (TVK Madurai Conference), ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுக்கு வரவுள்ள வாகனங்கள் எங்கு பார்க்கிங் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் (Thalapathy Vijay) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 21) நடக்கவுள்ள மாநாட்டு பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது. இப்படியான நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் வருகை தருவார்க்ள் என்பதால் போக்குவரத்து தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அதனை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு
மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக வரவேண்டும். அதேபோல் தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்தும் வாகனங்கள் இதே வழியைப் பின்பற்றி மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பார்த்திபனூர் நரிக்குடி திருச்சுழி அருப்புக்கோட்டை காரியாபட்டி வழியாக மாநாடு திடலை அடையலாம். அதேசமயம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து ரக வாகனங்களும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சென்று, அங்கிருந்து அ.முக்குளம், மீனாட்சிபுரம் வழியாக ஆவியூர் வந்து மாநாட்டு திடலை அடையலாம். இந்த வாகனங்கள் அனைத்தும் பார்க்கிங் ஒன்றில் வந்தடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட, மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள்
அதேபோல தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி மார்க்கமாக வருகை தந்து விராலிமலை, மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு சென்று பாரப்பத்தி மாநாடு நடைபெறும் இடத்தை அடைய வேண்டும். இந்த வாகனங்கள் பார்க்கிங் 2 மற்றும் 3ஐபயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்திலிருந்து வரும் தொண்டர்களின் வாகனங்கள் திண்டுக்கல் மார்க்கமாக வந்து பாண்டியராஜபுரம், நாகமலை புதுக்கோட்டை சந்திப்பு, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக செல்லலாம். தேனி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆண்டிபட்டி கனவாய் வழியாக உசிலம்பட்டி, நாகமலை புதுக்கோட்டை பைபாஸ், கப்பலூர் வழியாக பயணித்து மாநாட்டு நடைபெறும் இடத்தை அடையலாம். இவர்கள் பார்க்கிங் 1ஐ பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.