2 நாட்களுக்கு பொளக்கும் வெயில்.. 3 டிகிரி வரை உயரும் வெப்பநிலை.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனவும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

2 நாட்களுக்கு பொளக்கும் வெயில்.. 3 டிகிரி வரை உயரும் வெப்பநிலை.. வானிலை மையம் அலர்ட்

வெயில்

Updated On: 

05 Jun 2025 06:44 AM

சென்னை, ஜூன் 05 : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும் என வானிலை மையம் (tamil nadu weather alert) தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சென்னையில் மிதமான மழை பெய்ய (Chennai Rain) வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025ஆம் ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் பெரிதாக இல்லை என்றே சொல்லலாம். மே மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை வாட்டி வதைக்கும் நிலையில், 2025 மே மாதத்தில் மழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அவ்வபோதும், சென்னையிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. 2025 ஜூன் 4ஆம் தேதி மாலையில் கூட, பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

2 நாட்களுக்கு பொளக்கும் வெயில்

அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 05ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், 2025 ஜூன் 5ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளளது. அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானிலை எப்படி?


சென்னையில் கடந்த சில தினங்களாகவே பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. அதே நேரத்தில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சென்னைக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, 2025 ஜூன் 5ஆம் தேதியான இன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.