தமிழகத்தில் ஆரம்பமானது கோடை மழை: எந்தெந்த மாவட்டங்களில் ..?

Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இருப்பினும், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆரம்பமானது கோடை மழை: எந்தெந்த மாவட்டங்களில் ..?

கோப்புப் படம்

Published: 

24 Apr 2026 14:44 PM

 IST

தமிழகத்தில் கடந்த ஒரு நாளாக ஆங்காங்கே கோடை மழை எட்டிப் பார்த்துள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17.6 மி.மீ (சுமார் 2 செ.மீ) மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து திற்பரப்பு, ஊத்து, பெருஞ்சாணி அணை, நாலுமுக்கு மற்றும் புத்தன் அணை ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே சமயம், மாநிலத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வானம் பெரும்பாலும் வறண்டே காணப்பட்டது.

தற்போதைய வளிமண்டல சுழற்சி மற்றும் அதன் தாக்கம்

தமிழகத்தின் வானிலையில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் தற்போது வளிமண்டலத்தில் நிலவுகின்றன. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், சுமார் 0.9 கி.மீ உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்காணா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நீடிக்கிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

மழைப்பொழிவு குறித்த ஏழு தினங்களுக்கான முன்னறிவிப்பு

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இன்று (ஏப்ரல் 24) முதல் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 28-ஆம் தேதியன்று இதே பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும், புதுவை மற்றும் காரைக்காலிலும் பரவலாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை உயர்வு மற்றும் அசௌகரியமான வானிலை

மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.7°C பதிவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 28 வரை உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிக வெப்பத்துடன் ஈரப்பதமும் சேர்ந்து காணப்படுவதால், பொதுமக்களுக்கு ஒருவிதமான புழுக்கமும் உடல் அசௌகரியமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Also Read: தமிழக ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்! குறைந்த கட்டணம்… நிறைந்த வசதி!

சென்னை மற்றும் மீனவர்களுக்கான முக்கிய தகவல்கள்

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38°C வரை செல்லக்கூடும் என்பதால் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தமிழக கடலோரம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசவோ அல்லது இதர அபாயங்களோ இல்லை என்பதால் மீனவர்கள் தாராளமாக கடலுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..