சென்னை மக்களே ரெடியா? வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை
சென்னை, அக்டோபர் 02 : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு, சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அதன்படி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது. மேலும், இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுப்பெற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது அக்டோபர் 2ஆம் தேதியான இன்று கோபல்பூரில் இருந்து தென்கிழக்கே 160 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும், நகர்ந்து ஒடிசா மற்று அதனை ஒட்டிய ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கோபல்பூர் மற்றும் பாராதீப்பிற்கு இடையே இரவு கரையை கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி கடந்து பதிவான வெயில்.. இனி இப்படி தான் இருக்குமா?
தமிழகத்தில் தொடரும் கனமழை
இதன் காரணமாக, 2025 அக்டோபர் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கனமழை பெய்யக் கூடும். மேலும், 2025 அக்டோபர் 2ஆம் தேதியான இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, 2025 அக்டோபர் 3ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்தில் மழை இருக்குமா?
மேலும், அக்டோபர் 4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 அக்டோபர் 5ஆம் தேதி மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 அக்டோபர் 2,3ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.