4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்து எப்படி இருக்கும்?
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம் – செப்டம்பர் 27, 2025: கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு இரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 8 செ.மீ., திற்பரப்பு (கன்னியாகுமரி) 7 செ.மீ., சிற்றாறு-I (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 6 செ.மீ., சோலையார் (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), குழித்துறை (கன்னியாகுமரி) தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்டம்பர் 27, 2025 அன்று தமிழகத்தின் சில இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இது மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 2025 முதல் அக்டோபர் 3, 2025 வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: வீட்டில் தனியாக இருந்த தாய், மகள்.. கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. அதிர்ந்த கிருஷ்ணகிரி
தமிழகத்தின் மழை தீவிரம் சில மாவட்டங்களில் மட்டுமே இருந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் மழை அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: 9 மணி நேரம் தான் டிராவல்.. சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்.. எப்போது தெரியுமா?
தூத்துக்குடியில் பதிவான 37.5 டிகிரி செல்சியஸ்:
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சியில் 34.5 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 37 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 34.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.