தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.. இருப்பினும் இதனை பின்பற்ற வேண்டு – பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..
Tamil Nadu Public Health On Nipah Virus: தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 11, 2025: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மலப்புரம் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இதன் தாக்கம் சற்று அதிகரித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் விழிப்புடன் இருக்கவும் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கேரளாவில் பாலக்காடு மற்றும் மலப்புறம் மாவட்டத்தில் சமீபத்தில் வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகியுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நோய் பரவல் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என தெரிவித்துள்ளது
எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்:
குறிப்பாக எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை:
மேலும், ” தமிழ்நாட்டில் இதுவரை எவ்வித நிபா வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றாலும், பொதுமக்கள் பதற்றமின்றி, விழிப்புடன் இருந்து அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிபா வைரஸ் என்பது விலங்கியல் மூலம் பரவும் ஒரு நோய் தொற்றாகும். இது பழ வகை வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வௌவாலின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.
Also Read: மரணத்தின் பிடியில் நிமிஷா பிரியா.. உச்ச நீதிமன்றத்தில் மனு.. காப்பாற்றப்படுவாரா?
அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா என மக்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக, கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரைத் தொடர்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Also Read: சட்டம் படிக்க வேண்டுமா? கால அவகாசத்தை நீட்டித்த அம்பேத்கர் பல்கலைக்கழகம்…
பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும்:
சாப்பிடுவதற்கு முன்பு அனைத்து பழங்களையும் நன்கு கழுவவும், சோப்பால் கைகளை கழுவவும் என பொது மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை இயக்குநரகத்தால், மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை, சிறப்பு கவனம் செலுத்தி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.