தூய்மை பணியாளர்களுக்கு இனி 3 வேளையும் விலையில்லா உணவு.. டெண்டர் கோரிய அரசு..
Free Meal for Sanitization Workers: சென்னை மாநகராட்சியில் உள்ள பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்குமூன்று நேரமும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இதற்கான சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 11, 2025: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று நேரங்களிலும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சமையல் நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரியும் தங்களது வேலையை தனியாருக்கு மாற்றக் கூடாது எனவும் கோரிக்கை வைத்து, சென்னை மாநகராட்சி அலுவலக முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டம், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கலைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு அரசு சொன்ன அறிவிப்புகள்:
இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் தூய்மை பணியாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதாவது:
- தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது நுரையீரல் அல்லது தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக தனி சட்டம் ஒன்று நிறைவேற்றப்படும்.
- தூய்மை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால், நிதி உதவி வழங்கப்படும். அதோடு, 5 லட்சம் ரூபாய் காப்பீடு இலவசமாக ஏற்பாடு செய்யப்படும். இதனால், பணியின் போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்துக்கு மொத்தம் 10 லட்சம் ரூபாய் நிதி கிடைக்கும்.
- தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது, அதிகபட்சம் 3,50,000 ரூபாய் வரை 35 சதவீத மானியம் வழங்கப்படும்.
- நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சியின் மூலம் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க: நான் ஏன் பதவி விலக வேண்டும்? எந்த அவசியமும் இல்லை – நயினார் நாகேந்திரன்
3 வேலையும் விலையில்லா உணவு:
ஏற்கனவே காலை உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களிலும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை’ அன்புமணி நீக்கம் குறித்து வழக்கறிஞர் பாலு பேச்சு
மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான சமையல் நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மூன்று நேரங்களிலும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.