தமிழகத்தில் முதல் முறையாக “உலகளாவிய சுற்றுலா மாநாடு”…அடுத்த மாதம் நடக்கிறது..எங்கு தெரியுமா!
Tamil Nadu Global Tourism Conference: தமிழகத்தில் அடுத்த மாதம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026 நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலா மேம்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் .

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாத்துறையில் தனியாரின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சுற்றுலாத்துறை சார்பில் முதல் முதலாக செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டல் வளாகத்தில் (FOUR POINTS BY SHERATION) அடுத்த மாதம் பிப்ரவரி 2- ஆம் தேதி மற்றும் 3- ஆம் தேதிகளில் “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026” நடத்த உள்ளது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் பொது மற்றும் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும், தமிழக சுற்றுலா துறையை உலகளாவிய முதலீட்டு தளமாக மாற்றும் வகையிலும் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
உள்நாடு,வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள்
இந்த மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்பவர்கள், சுற்றுலாவை மேம்படுத்துபவர்கள், வர்த்தகத் துறைகள் மற்றும் சுற்றுலாத் துறைகள் சார்ந்த வர்த்தக நிபுணர்கள், சுற்றுலா தொழில் முனைவோர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள், தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து, புதுமையான சுற்றுலா அனுபவங்கள் மற்றும் அதற்கேற்றவாறு உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்த உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் சுற்றுலா மற்றும் சுற்றுலா துறை சார்ந்த வேலை வாய்ப்பு, வர்த்தகம் ஆகியவை வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தவெகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையா? விஜய்யை திடீரென புகழ்ந்து பேசிய அருள் எம்எல்ஏ..என்ன காரணம்!
பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்த முதல்வர்
இது தொடர்பாக கடந்த 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக சுற்றுலா துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், அடுத்த மாதம் மகாபலிபுரத்தில் உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகள்
இதற்காக, நிதிநிலை அறிக்கையில் ரூ.524.16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து சுற்றுலா தளங்களை மேம்படுத்தி வருகிறது. இதில், சுற்றுலா தளங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை மற்றும் தங்கும் விடுதி வசதி, ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய மேம்பாடு திட்டத்தின் கீழ், பாரம்பரிய தளங்களை புனரமைத்து மேம்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல், அருவிகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை மேம்படுத்துதல் என்பன உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: தேமுதிக-அதிமுக கூட்டணி உறுதியாகிறது…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…சீனிவாசன் கொடுத்த அப்டே்!