Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

TN CM MK Stalin Letter: தமிழ்நாட்டில் ஜூலை 1, 2025 ஆம் தேதி முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டம் மூலம் ஆட்சேர்ப்பு நடக்க உள்ளதாகவும், மாபெரும் பரப்புரைப் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு.. ஜூலை 1ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்..
முதலமைச்சர் ஸ்டாலின்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Jun 2025 12:34 PM IST

சென்னை, ஜூன் 28, 2025: வருகின்ற ஜூலை 1, 2025 முதல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டு வருகிறேன். இரண்டு நாட்களாக வேலூர் – திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள்:

எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அளவற்ற அன்பைப் பொழியும் மக்களிடம், நான்காண்டுகாலக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்கிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்கிறேன்.

உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அந்த விமர்சனங்களில் உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம்.

ஓரணியில் தமிழ்நாடு:


மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.

சிறப்பு செயலி மூலம் ஆட்சேர்ப்பு:

இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கழக அமைப்புச் செயலாளர் சகோதரர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் – தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:

இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது. ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.