விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது.. கார் வரை சென்று முதல்வர் விஜய்யை வழி அனுப்பிய வைகோ..
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோப்பு புகைப்படம்
மே 11, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார். பின்னர், பிற்பகலில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அங்கு மரியாதை செலுத்திய பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்த முதல்வர் விஜய்:
#WATCH | Chennai: Tamil Nadu CM Vijay leaves after meeting MDMK founder Vaiko at his residence in Anna Nagar. pic.twitter.com/rqKp8ItH5z
— ANI (@ANI) May 11, 2026
அதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றார். வைகோ வீட்டிற்கு சென்ற முதல்வர் விஜய்யை வாசலுக்கே வந்து துரை வைகோ கட்டியணைத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர், பொன்னாடை போர்த்தி வைகோ வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் அரசியல் ரீதியாக பேசினர்.
விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது:
இந்த சந்திப்புக்குப் பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ இருவரும் கார் வரை வந்து முதல்வர் விஜயை வழியனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது. ‘உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்’ என அவர் என்னிடம் தெரிவித்தார். அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதனை முதல்வர் விஜய் தற்போது தொடர்கிறார்.
முதல்வர் விஜய்க்கு அறிவுரை அல்ல, வாழ்த்து கூறினேன். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதற்கான அடையாளம்தான் இந்த தேர்தல் முடிவு. மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாப்பேன் என்ற உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு வாழ்த்துக்கள். அதை அப்படியே தொடருங்கள் என்று நான் குறிப்பிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.