AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெயிலுக்கு பிரேக்.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மழை அலர்ட்.. இந்த மாவட்டங்கள் கவனம்!

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 03 Jun 2026 15:07 PM IST

Tamil Nadu Rain: தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பதிவாகியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தின் நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 85 மில்லிமீட்டர் மழை பதிவாகி கவனம் ஈர்த்துள்ளது. அதேசமயம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியே நிலவியது. மாநிலத்தில் அதிகபட்சமாக வேலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக சமவெளிப் பகுதிகளில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 23.2 டிகிரியும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 12.8 டிகிரியும் பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை தீவிரம்

வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை ஏற்படலாம்.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் சாத்தியம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 4 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகமாக காணப்படக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழை தீவிரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 5 முதல் 8 வரை பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read: கோவையில் கொடூர ஹிட் அண்ட் ரன்: முதியவரை தூக்கி வீசிய கார்… வைரலாகும் சிசிடிவி!

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடல் மற்றும் கேரளா-கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால், குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Follow Us