TN Assembly Election: மீண்டும் இணைகிறதா அதிமுக – பாஜக கூட்டணி.. வரலாறு மாறுமா?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த கால கூட்டணி அனுபவங்கள், தற்போதைய மோதல் போக்கு, மற்றும் இரு கட்சிகளின் நிலைப்பாடுகள் 2026 தேர்தலில் எப்படியாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தலால் (Taminadu Assembly Election 2026) தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.தமிழ்நாடு அரசியலைப் பொருத்தவரை 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தல் வரை திராவிட முன்னேற்ற கழகம் (DMK) மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்துள்ளது. அதேசமயம் இரு கட்சிகளின் கீழ் அமையும் கூட்டணி என்பது ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றம் கண்டுள்ளது. எம்ஜிஆர் 1974 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அதன் பின்னர் ஜெயலலிதா அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்றார். இதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல் நலக் குறைவால் காலமானார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் பல்வேறு விதமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலரும் முயற்சித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக என்னாகுமோ என பலரும் நினைத்தனர். ஆனால் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை ஓவர்டேக் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 2017 ஆம் ஆண்டு இபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்றார். நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இந்த காலக்கட்டம் தான் அதிமுகவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்தது.
அதிமுக – பாஜக கூட்டணி கதை
அதிமுக ஆட்சியில் இருப்பதற்கு மத்தியில் இருக்கும் பாஜக தான் காரணம் என அப்போதைய எதிர்க்கட்சியான திமுக சரமாரியாக குற்றம் சாட்டியது. அதிமுகவை வைத்து தமிழ்நாட்டில் பாஜக நுழைந்து விட பார்க்கிறது என தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது. முன்னதாக 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்தது. இதில் இக்கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் 1999 ஆம் ஆண்டு பாஜகவுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திடீரென வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது.
மேலும் இனிமேல் இக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என தடாலடியாக அறிவித்தார். கடைசி வரை தனது வாக்கை ஜெயலலிதா காப்பாற்றினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றபின் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. இதில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. இருந்தாலும் கூட்டணி தொடர்ந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது. இதில் இக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. ஆனால் பாஜகவில் இருந்து 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர். இதுவே தமிழ்நாட்டில் பாஜகவின் பெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது.
முறிந்த கூட்டணி ஒட்டுமா?
இதற்கிடையில் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்று தந்ததால் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் அண்ணாமலை மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவியேற்ற நாள் முதல் தொடங்கி கூட்டணியில் அவ்வப்போது விரிசல் விழ தொடங்கியது. அதிமுக தலைவர்களை அண்ணாமலை அவமரியாதையாக பேசியதாக மூத்த தலைவர்களும் தொண்டர்களும் கொந்தளித்தனர். இதனால் 2024 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமையுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறி அதிக இடங்களை கேட்டதாக தகவல் வெளியானது. இதனால் கடைசியில் அதிமுக – பாஜக கூட்டணி உருவாகாமல் சென்று விட்டது. ஆக அந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது. ஆனால் அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. மீண்டும் விரிசலில் இருந்த அதிமுக பாஜக கூட்டணி ஒட்டும் நிலைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருந்தாலும் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக தனது நிலையிலிருந்து எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவும் இறங்கி வர தயாராக இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கள் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்களை பெரிய கட்சியாக பாஜக காட்டிக் கொள்வதால் கூட்டணி அமைவதில் தொடர்ச்சியாக சிக்கல் எழுகிறது. ஆனால் அதிமுக தலைவர்கள் தங்கள் பேச்சில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடினர்.
ஆனால் தற்போது திமுக மட்டுமே தங்கள் எதிரி அவர்களை எப்படியாவது 2026 தேர்தலில் தோற்கடிப்போம் என சொல்லி வருவதால் மீண்டும் இந்த கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக நம்பப்படுகிறது. அதேசமயம் திமுக அரசின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக பாஜக கூறி வருகிறது. எப்படியும் 2026 தேர்தலில் அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போவது உறுதியாகி விட்டது. அது எந்த வகையில் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.