TVK Vijay: விஜய் போடும் அரசியல் கணக்கு.. போட்டியிடப்போகும் தொகுதி இதுதானா?
Vijay Political Debut constituency : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு தொடங்கிவிட்டது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களத்தில் இறங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் தவெக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்படுகிறது. விஜய் போட்டியிட உள்ள தொகுதி குறித்த யூகங்கள் அதிகரித்துள்ளன.

கிட்டத்தட்ட இன்னும் ஒரு வருட காலம் இருந்தாலும், 2026 சட்டசபை தேர்தலுக்கான ( Tamil Nadu Legislative Assembly election 2026) பரபரப்பு தற்போதே தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. கட்சிகள் தொடக்க வேலைகளை வேகமாக தொடங்கிவிட்டன. அடிப்படை விஷயங்களை வலுப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் உள்ளூரில் இருந்து மாவட்ட வாரியாக கட்சிகள் வேலையை தொடங்கி 2026ஐ நோக்கி நகரத் தொடங்கிவிட்டது. வழக்கமான போட்டிகள், வழக்கமான கூட்டணி கட்சிகள் என்று இல்லாமல் வரப்போகும் 2026 தேர்தல் பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியுள்ளன. அதில் மிக முக்கியமானது நடிகர் விஜய் (Actor Vijay) அரசியல்வாதியாக கொடுத்துள்ள எண்ட்ரி. புதிதாக களத்தில் வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam)
தமிழக வெற்றிக் கழகம்
இந்த நேரத்தில் வந்துள்ள புது கட்சியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பல எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ளது. தவெக தொடக்கம் முதலே பாஜக, திமுகவை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கினாலும் தற்போது திமுகவை நேரடியாக தாக்கத் தொடங்கிவிட்டது. அதனால் தவெகவின் நேரடி எதிரியாக திமுக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவின் கூட்டணி கணக்குகள் ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டின் பார்வை தவெக தலைவர் விஜய் மீது உள்ளது. தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்கு பிறகான முதல் பெரிய தேர்தல் என்பதால் விஜயின் நகர்வு எப்படி இருக்கும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள்
தவெக தலைவர் விஜய் வீடியோ
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
விஜய் தேர்வு செய்யும் தொகுதி எது?
குறிப்பாக விஜய் எந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என பல கணிப்புகள் கிளம்புகின்றன. தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்லும் தகவலின்படி பார்த்தாக் விஜயின் அரசியல் கணக்கு ராமநாதபுரத்தில் இருந்தே தொடங்கும் என தெரிகிறது.
விஜய் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்தாலும் மீனவர்கள் பிரச்னையில் அவர் தீவிரம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. விரைவில் மீனவர்கள் பிரச்னையை கையில் எடுத்து சக மீனவர்களுடன் சேர்ந்து அவர் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்றும் தெரிகிறது. அது வரப்போகும் தேர்தலுக்கான முன்னேற்பாடகவே பார்க்கப்படுகிறது. விஜய், மீனவர்கள் அதிகம் வசிக்கும் ராமநாதபுரத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும், அதற்கான காய் நகர்த்தலாகவே மீனவர் பிரச்னையை கையில் எடுப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
கட்சிகளின் கணக்குகள்
தற்போது ஆளும் கட்சியான திமுக தன்னுடைய ஆட்சியை கண்டிப்பாக தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று தீவிரமாக உள்ளது. திமுகவுக்கு நேர் எதிர் போட்டியாக பார்க்கப்படும் அதிமுக, கடந்த முறை விட்டதை இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், சசிகலா ஆகியோரும் அதிமுகவை ஒன்றிணைக்கலாமா என்ற வலையை வீசி வருகின்றனர். மறுபுறம் பாஜக தொடர்ந்து பல பிரச்னைகளுக்கு குரல் எழுப்பி தன்னை எதிர்கட்சியாக நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, நாம் தமிழர் என அடுத்தடுத்த கட்சிகள் கூட்டணி கணக்குகளுடனும், சீட் கணக்குகளுடனும் காய் நகர்த்தி வருகின்றன.