இடஒதுக்கீடுக்கு அதிக முக்கியத்துவம்.. வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
Mahabalipuram Youth Fest: மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழாவில், பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பாராகிளைடிங் மூலம் வன்னியர் கொடியை ஏற்றினார். இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம் மே 11: மாமல்லபுரம் (Mahabalipuram) அடுத்த திருவிடந்தை பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா இன்று அதாவது 2025 மே 11ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) வருகை தந்தபோது கடலில் பாராகிளைட் மூலம், வன்னியர் கொடி பறக்கவிடப்பட்டது. இதை தொடர்ந்து, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), பாமக பொதுச்செயலாளர் ஜி.கே. மணி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிஅக்ள் கலந்து கொண்டனர். மாநாடு மாலை 4 மணி தொடங்கிய நிலையில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு..
- வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கிட வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசுத்துறையில் உறுதி செய்ய வேண்டும்.
- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
- கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.
- தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
- பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சதவீதம் உயர்த்த வேண்டும்.
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பணிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரியான சர்வே நடத்தப்பட வேண்டும்.
- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு பாராட்டுகளும், நன்றியும்.
- தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சாதிவாரி மக்கள் தொகைக் கணகெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்மாநாட்டின் மூலம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது.