உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.. ரூ.6 லட்சத்தை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் ஷாக்!
Youth Suicide By Online Rummy : ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுளளார். ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்து வந்த இளைஞர், ரூ.6 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

திருவள்ளூர், மே 11 : திருவள்ளூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருப்பினும், ஆன்லைன் ரம்மியை தமிழகத்தில் இளைஞர்கள் என பலரும் விளையாடி வருகின்றனர். இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குப்படுத்தி விதிமுறைகளை தமிழக அரசு விதித்தது.
உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி
இருப்பினும், ஆன்லைன் ரம்மியை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதனால், பல உயிரிழப்புகளும் நடக்கின்றனர். ஆன்லைன் ரம்மியில் அதிக பணத்தை இழந்தவர்கள் விபரீத முடிவ எடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஒரு சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.
அதாவது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் வங்கியில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்தார். இவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டு வந்தாக தெரிகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி அதிகளவிலான பணத்தை முதலீடு செய்திருக்கிறார்.
கிட்டதட்ட ரூ.6 லட்சம் வரை முதலீடு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் ரம்மியால் முருகன் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கூட, ராமநாதபுரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். சாத்தையா என்பவர் ராமநாதபிரபு என்பவர் காரை ஏற்றி கொலை செய்துள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆன்லைன் ரம்மியால் அடுத்தடுத்து மரணங்கள் நடைபெறுவதை அடுத்து, அதனை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை ஆன்லைன் ரம்மியால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)