ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்.. அரசை விமர்சித்த அண்ணாமலை
வேலூர் அணைக்கட்டு பகுதியில் ஆற்று வெள்ளத்தால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அடிப்படை வசதிகளான பாலங்கள் இல்லாததால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் கல்வி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. கிராம மக்கள் அரசு உடனடியாக தலையிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தையும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்ய பாலம் கட்டும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர், அக்டோபர் 9: வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளி செல்ல முயலாமல் தவித்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. என்னதான் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என சொல்லப்பட்டாலும் கடைக்கோடி கிராமம் வரை ஏதேனும் ஒரு சேவை என்பது இன்றுவரை கிடைக்கப்பெறாமல் தான் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாலை வசதி, ஆற்றைக் கடக்க பாலம், கழிவறை, இடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாதது, மருத்துவமனை இல்லாதது என பல தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள மலை கிராமங்களான கொலையம், அரசமரத்தூர், ஆனைமரத்தூர், நெக்கினி, பட்டிகொல்லை, கோரனூர், ஜவ்வாது மலை பகுதி என 50க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தானியமரத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.




பொதுவாக இங்கு பயிலும் மாணவர்கள் அமிர்தி வழியாக கானாறுகளை கடந்து பள்ளிக்கு செல்வதற்கு வழக்கம். இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 6ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் நேற்று (அக்டோபர் 8) காலை வழக்கம் போல நெக்கினி கிராமத்தில் இருந்து அமிர்தி வழியாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் கானாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும் தங்களது பெற்றோர்களை தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லாததால் நீண்ட நேரமாக ஆற்றங்கரையில் காத்திருந்து பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இதே போல் பலாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மாணவர்களும் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் விடுதிக்கு நேற்று திரும்பியுள்ளனர். அப்போது அவர்களும் வெள்ளப்பெருக்கு சிக்கிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்தவர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read: பாஜகவின் ஓரவஞ்சனை.. காட்டமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
இந்த நிலையில் கனமழையால் ஆற்றுப்பாதைகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் நிலையில் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத சூழல் இருப்பதால் அரசு உடனடியாக தலையிட்டு பாலம் கட்டி தர வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அவசர தேவைகளுக்காக முக்கிய பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் தாங்கள் தவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் எப்போதெல்லாம் வெள்ளம் வருகிறதோ அப்போதெல்லாம் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர் எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எங்களது தேவையை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அண்ணாமலை வெளியிட்ட பதிவு
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பலாம்பட்டு மலை ஊராட்சிக்குட்பட்ட கொலையம், அரசமரத்தூர், கோரணுர், தானிமரதூர், நெக்கினி, பட்டிகொல்லை ஆகிய மலைகிராமங்களில் இருந்து, தானியமரத்தூர் அரசுப் பள்ளியில், மாணவர்கள் பலாம்பட்டு மலைப்பாதைகளின் வழியாகவும், கானாறு வழியாகவும்… pic.twitter.com/lWbIJvZgqG
— K.Annamalai (@annamalai_k) October 8, 2025
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வாரம் பெய்த கன மழையால் நெக்கினி மலைகிராமத்தில் இருந்து அமிர்தி வழியாக செல்லும் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மதியம் வரை, சுமார் 7 மணி நேரம் மாணவர்கள் நடுக்காட்டில், ஆபத்தான நிலையில் காத்திருக்க நேரிட்டுள்ளது. ஆற்றைக் கடக்க முடியாது என்பதால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
கிராம சாலைகள், சிறு பாலங்கள் அமைக்க, கடந்த ஆண்டு வரை, மத்திய அரசு, ரூ. 5,886 கோடி நிதி வழங்கியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில், இன்னும் கிராமங்கள், மலைக் கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. இந்தச் செய்திகள் எல்லாம் பார்க்கும்போது, இப்படிப் பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா?” என சரமாரியாக விமர்சித்துள்ளார்.