யூடியூப் வீடியோவால் வந்த வினை…உடல் எடையை குறைப்பதற்காக நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி…அடுத்து நடந்த விபரீதம்!
Madurai Student Dies : மதுரையில் உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி வாந்தி எடுத்துடன் மயக்கம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

மதுரையில் நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி பலி
மதுரை மாவட்டம், செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கலையரசி. மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், உடல் பருமன் அதிகமாக இருப்பதாக எண்ணிய கலையரசி உடல் எடையை குறைப்பதற்கு முடிவு செய்தார். இதற்காக யூடியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டது போல சில நாட்டு மருந்துகளை அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்து கடையில் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். இந்த மருந்துகளை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கலையரசி திடீரென வாந்தி ஏற்பட்டு மயக்கி சரிந்து விழுந்தார். உடனே அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலையரசியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி பலி
அங்கு, அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, அவருக்கு இரவில் திடீரென மீண்டும் உடல் நல குறைவு ஏற்பட்டது. உடனே, கலையரசி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கலையரசியின் சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: பலூனுக்கு காற்று நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து – 3 பேர் பரிதாபமாக பலி – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நாட்டு மருந்து கடையில் போலீசார் விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக, கலையரசியின் தந்தை வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டு மருந்து கடையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவி கலையரசி எந்த மாதிரியான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது தொடர்பாகவும், அந்த நாட்டு மருந்து கடையின் உரிமையாளரிடம் மருத்துவர்களின் முறையான பரிந்துரையின்றி நாட்டு மருந்துகளை பொது மக்களுக்கு வழங்கக் கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
சமீப காலமாக யூடியூப்பில் வரும் வீடியோக்களை பார்த்து மருத்துவர்களின் பரிந்துரை இன்றி இது போன்ற மருந்துகளை சிலர் உட்கொண்டு வருகின்றனர். இது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, இது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் உரிய பரிந்துரை இன்றி எந்த விதமான நோய்க்கும் தானாக மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: “எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா”…தமிழக டிஜிபிக்கு 1500 போலீசார் கடிதம்…என்ன காரணம்!