SIR பணிகள்; அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு

தமிழகத்தில் SIR படிவங்கள் விநியோகிக்கும் பணிகள் 92.04% நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை சேகரிக்க வீடு தோறும் வருகை தரும் பொழுது வாக்காளர்கள் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

SIR பணிகள்; அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு

தலைமை தேர்தல் அதிகாரி

Updated On: 

17 Nov 2025 07:56 AM

 IST

சென்னை, நவம்பர் 17: தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனிடையே, இப்பணிகளின் ஒரு பகுதியாக, நிரப்பப்பட்ட SIR படிவங்களைச் சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள், அந்தப் படிவங்களில் உள்ள விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டவை என கட்டாயமாக உறுதிமொழி வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive revision) நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த பணி கடந்த நவ.4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள்.

தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு:

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிஎல்ஓக்கள் (Booth Level Officers) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, அவர்கள் நிரப்பிய படிவங்களை வீடு வீடாகச் சென்று திரும்பப் பெற்று வருகிறார்கள்.

இந்தப் பணிகளை சீராகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றுவதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருப்பதால், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் முழுமையாக இதில் ஈடுபட வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் முன், தினமும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையில் நிரப்பப்பட்ட SIR படிவங்களை பெற்று அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உறுதிமொழி கட்டாயம்:

SIR படிவங்களை அளிக்கும் போது, வாக்​குச்​சாவடி முகவர்​கள்கள் கீழ்கண்ட உறுதிமொழியையும் இணைக்க வேண்டும்:

“என்னால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும், எனது பொறுப்புக்குட்பட்ட வாக்காளர் பட்டியலோடு சரிபார்க்கப்பட்டவை என்பதையும், தவறான தகவல் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 31ன் படி தண்டனற்குரியது என்பதையும் நான் அறிவேன்”

இந்த உறுதிமொழி இணைக்கப்படாமல் இருந்தால், அந்தப் படிவங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெறப்படும் படிவங்களை பிஎல்ஓக்கள் முதலில் சரிபார்த்து, பின்னர் அவற்றை டிஜிட்டல் வடிவில் உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரியிடம் எல்.டி.சி. மூலம் அனுப்ப வேண்டும். அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பதிவு அதிகாரிகள் படிவங்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.