போன் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல் கசியுதா? SIR மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு!
Public Aadhaar Number Misuse: தமிழகத்தில் எஸ்ஐஆர் திருத்த பணிகளில் வழங்கப்பட்ட பொதுக்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்களை மர்ம நபர்கள் தவறான வகையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மக்களின் தனிப்பட்ட தகவல் வெளியீடு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026- ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக கடந்த மாதம் முதல் வாக்காளர் விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்கினர். இந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து டிசம்பர் 4- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான காலவரம்பு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 11- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர்-வாக்காளர் இறுதி பட்டியல்
எஸ் ஐ ஆர் பணிகளுக்கு தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 16- ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 14- ஆம் தேதி வாக்காளர் இறுதி பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாக வாக்காளர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்கள் பொதுவெளியில் வெளியானது குறித்து பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பாமக தலைவர் பதவி விவகாரம்…ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு!
பொதுமக்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணிகள் மற்றும் திரும்ப பெரும் பணிகளை அரசியல் கட்சிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் கைப்பேசி எண்கள் அவர்கள் வசம் சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன் மூலம் ஒரு தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் யார் யார், அவர்களின் செல்போன் மற்று ஆதார் எண்கள் உள்ளிட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.
தொகுதி வாரியாக செல்போன் எண்களில் பிரச்சாரம்
இதனால், அரசியல் கட்சியினர் மாநிலத்தில் உள்ள பொதுமக்களின் செல்போன் எண்களை பெற்று பிரச்சார எஸ்எம்எஸ்கள் அனுப்புவது போல, தற்போது, தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. மேலும், பூத் கமிட்டி நிர்வாகிகள் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான சந்தேகங்களை கேட்கின்றனர். அப்போது, நீங்கள் பூத் அலுவலரா என்று கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லை.
எனவே, வாக்காளர்களின் செல்போன் எண்கள் தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. புதிய கட்சி தொடக்கம்? பாஜக தலைவர்களை சந்திக்கவும் திட்டம்!!