11-ஆம் வகுப்பில் தோல்வியா? மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

Second Chance Public Exam: தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 25,051 பேர் இன்று 2026 மார்ச் 3–27 வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்கின்றனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

11-ஆம் வகுப்பில் தோல்வியா? மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

பொதுத்தேர்வு

Published: 

03 Mar 2026 10:58 AM

 IST

தமிழகத்தில் 11ம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கு 2026 இன்று மார்ச் 3 முதல் 27 வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 25,051 மாணவர்கள் 2,615 மையங்களில் தேர்வெழுத உள்ளனர். 3,612 பள்ளிகளில் இருந்து 19,107 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 5,944 பேர் தனித்தேர்வர்களாக தேர்வெழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 286 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

அரியர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு

11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 25 ஆயிரத்து 51 மாணவர்களுக்கு 2026 மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 2017-18ஆம் ஆண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பாண்டில் (2025-26ஆம் கல்வியாண்டு) 11ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஏற்கனவே 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

25,051 மாணவர்கள் தேர்வுக்கு தயாராகின்றனர்

இந்த நிலையில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு (Arrear) மாணவர்களுக்கு 2026 மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை 3,612 பள்ளிகளைச் சேர்ந்த 19,107 பள்ளி மாணவர்கள் மற்றும் 5,944 தனித்தேர்வர்கள் என மொத்தம் 25,051 பேர் 2,615 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். தேர்வுகள் சிறப்பாக நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: தமிழகத்தில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள்

தேர்வு நடைபெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க 286க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் மற்றும் 2,668 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும் வினாத்தாள்கள் தொடர்பான சந்தேகங்களை dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்க அரசுத் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ