RSS அமைப்பினர் கைது.. பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

சென்னை ஐயப்பன்தாங்கல் அரசு பள்ளியில் அனுமதியின்றி ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா பயிற்சி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

RSS அமைப்பினர் கைது..  பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

RSS அமைப்பினர் (கோப்பு படம்)

Updated On: 

03 Oct 2025 08:46 AM

 IST

தமிழ்நாடு, அக்டோபர் 3: சென்னை அருகே அனுமதியின்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர்கள் பயிற்சியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மற்றும் பாரதிய ஜனதா சங்கத்தின் நிறுவனர் தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களாக குருபூஜை மற்றும் பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

இவர்கள் உரிய அனுமதியின்றி அரசு பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி நிகழ்ச்சியை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களை நேற்று போரூர் காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் இடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 47 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அவர்கள் அனைவரும் ஐயப்பன்தாங்கலில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Also Read:   பால் பண்ணை.. இயற்கை விவசாயம்.. எதிர்கால முயற்சிகள் குறித்து ஓபனாக பேசிய அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர்கள் கண்டனம்


இந்த நிலையில் இந்த கைது சம்பவத்திற்கு தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வழக்கமாக பயிற்சி செய்யும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நிகழ்வுகளை மேற்கொண்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பவர்கள்,  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியான பயிற்சி ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என காட்டமாக விமர்சித்தார்”

இதேபோல் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளும், முதியோர்களை கொலை செய்யும் கொலையாளிகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பதை கண்டுகொள்ளாத திமுக அரசு, தங்கள் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக அமைதி பேரணி சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்திருப்பது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறென்ன?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

Also Read:  எது திராவிட மாடல், எது காவி மாடல் தெளிவுப்படுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின்

மேலும் இனியும் இதுபோன்ற, சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை திமுக அரசும், காவல்துறையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார்.