இந்த 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் – எப்போ தெரியுமா? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Red Alert Issued Again in Tamil Nadu: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து, இந்த 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி , நவம்பர் 26, 2025 அன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது. இந்த நிலையில் நவம்பர் 25, 2025 அன்று மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு திசையில் நகர்ந்து, சென்யார் (Senyar) புயலாக மாறியுள்ளது. பிறகு, மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, காலை 8.30 மணி அளவில் இந்தோனேசியா (Indonesia) கடற்கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இந்த நிலையில் வருகிற நவம்பர் 29, 2025 அன்று சனிக்கிழமை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த பகுதிகளில் 7 முதல் 15 செ.மீ வரை கனமழை உருவாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை.. எப்போது தொடங்கும்? எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை?
மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. இங்கு 12 முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 27, 2025 அன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: இடிந்து விழுந்த வீடுகள்.. வெள்ள அபாய எச்சரிக்கை!!
கடந்த 24 மணி நேரத்தில் வானிலை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அதிகபட்சமாக 8 செ.மீ மழையும், ராமேஸ்வரத்தில் 6 செ.மீ மழையும், மண்டபத்தில் 5 செ.மீ மழையும், தங்கச்சிமடம் பகுதியில் 4 செ.மீ மழையும், வாலிநோக்கம் பகுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.