Tamilnadu Weather: இடி மின்னலுடன் மழை… அதே நேரத்தில் வெப்பம் உயர்வு!
Rain Alert: தமிழகத்தில் 2026 ஏப்ரல் 2ஆம் தேதி வரை மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை தற்காலிகமாக உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் மழை மற்றும் வறண்ட வானிலை மாறி மாறி நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27-03-2026 அன்று பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் நிலையில், 28-03-2026 முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29-03-2026 அன்று இந்த பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 2026 மார்ச் 30 மற்றும் 31 மார்ச் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் சேர்த்து தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 2026 ஏப்ரல் 1ஆம் தேதி இதே நிலை தொடரும் நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி தென் கடலோரம், டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம் எந்த நாளில் அதிக தாக்கம்?
வெப்பநிலை மாற்றம் குறித்து வெளியிடப்பட்ட முன்னறிவிப்பின்படி, 27-03-2026 அன்று குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் சற்று அதிகரிப்பு இருக்கக்கூடும். 28-03-2026 அன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 29-03-2026 முதல் 31-03-2026 வரை வெப்பநிலை படிப்படியாக குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 27 மற்றும் 28 மார்ச் தேதிகளில் இயல்பை விட 3-4 டிகிரி வரை அதிகமாக வெப்பநிலை இருக்கும் வாய்ப்பு உள்ளது. 31-03-2026 அன்று வெப்பநிலை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை சூழல் எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 27-03-2026 மற்றும் 28-03-2026 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பகலில் வெப்பம் அதிகரித்தாலும், இரவு நேரங்களில் சற்று சீரான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: “பெண் சொன்னால் ‘வேண்டாம்’ தான்!” – தீர்ப்புகளை சாடிய குஷ்பு
வானிலை நிலவரம்: மக்கள் கவனத்திற்கு!
மொத்தத்தில் தமிழகம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை மற்றும் இடைக்கிடை மழை நிலை காணப்படும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில், சில இடங்களில் வெப்பநிலை தாறுமாறாக உயர்ந்து மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. எனவே மக்கள் வெப்பத்தையும் மழையையும் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.