இனப்பெருக்க காலம்…கடற்கரைக்கு படையெடுக்கும் கடல் ஆமைகள்…உயிரிழப்பை தடுக்க ஆமை விலக்கு சாதனங்கள் அளிப்பு!
Turtles: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு ஆமை விலக்கு சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில இடங்களில் மீன்பிடி படகுகளில் சிக்கி ஆமைகள் உயிரிழந்து வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மீன்பிடி படகில் சிக்கி உயிரிழக்கும் ஆமைகள்
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் ஏராளமான கடல் ஆமைகள் இனப் பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வந்து செல்கின்றன. மேலும், கடற்கரை பகுதிகளில் முட்டை இட்டு வருகின்றன. அதன்படி, தற்போது தமிழகத்தில் கடந்த ஜனவரி 1- ஆம் தேதி ( வியாழக்கிழமை) முதல் வருகிற ஜனவரி 30- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) வரை கடல் ஆமைகள் இனப்பெருக்க காலமாகும். அதன்படி, இந்த காலக் கட்டத்தில் கடற்கரையில் இருந்து 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடி விசைப்படகுகள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல, கடல் ஆமைகள் முட்டை இடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் 10 குதிரை திறனுக்கு அதிகமான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவது மற்றும் திருக்கை மீன் வலைகள் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.6.40 கோடியில் மீனவர்களுக்கு ஆமைகள் விலக்கு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு ஆமை விலக்கு சாதனங்கள்
இதில், முதல் கட்டமாக 50 மீன்பிடி விசைப் படகுகளுக்கு ரூ.11.75 லட்சத்தில் சோதனை அடிப்படையிலும், 2,613 படகுகளுக்கு ரூ.6.29 கோடியிலும் ஆமை விலக்கு சாதனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது இழு வலைகளில் இந்த சாதனங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாதனங்கள் மீனவர்களுக்கு விலை இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தச் சாதனங்களின் மூலம் மீன்பிடி இழு வலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளியே செல்வதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
மேலும் படிக்க: குடியரசு தினம்:ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்…நிகழ்ச்சி நிரல் இதோ!
கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலம்
பொதுவாக கடல் வாழ் உயிரினங்களில் ஒன்றான ஆமையின் இனப்பெருக்க காலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இருக்கும். இந்த காலக் கட்டத்தில் கடல் ஆமைகள் இணை சேர்ந்து, கடற்கரை மணல் பரப்பில் குழி தோண்டி அதில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கும். இந்த நிலையில், தற்போது, ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால் ஆழ்கடல் பகுதியில் இருந்து ஏராளமான கடல் ஆமைகள் கடற்கரை பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு வரும் ஆமைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவளம், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி படகில் மோதுவதுடன், மீன்பிடி வலையில் சிக்கி காயமடைந்து உயிரிழக்கின்றன.
ஆமைகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும்
இதில், ஆள்கள் நடமாட்டம் உள்ள கடற்கரை பகுதியில் ஆமைகள் உயிரிழந்து கிடந்தால், அவற்றை மணலில் குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். ஆனால், ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உயிரிழந்து கிடக்கும் ஆமைகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, இனப்பெருக்க காலத்தில் ஆமைகள் உயிரிழக்காத வகையில், மீன்வளத்துறை முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..