வேலூர் தங்க கோயிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு…பலத்த போலீஸ் பாதுகாப்பு!
President Murmu worships Golden Temple: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று வேலூர் வருகை தந்திருந்தார். அவர், வேலூரில் உள்ள தங்க கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். இதன் பின்னர், அவர் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தங்க கோயிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அவர் இன்று புதன்கிழமை (டிசம்பர் 17) தமிழகம் வர இருப்பதாகவும், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.
ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜனாதிபதி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகைக்காக அந்தப் பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஹெலிபேட்டில் வந்திரங்கிய குடியரசுத் தலைவரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அங்கிருந்து கோவிலுக்கு அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து, நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.
மேலும் படிக்க: NRI சிறுவனை அதிர்ச்சியில் ஆழ்த்திய சென்னை உணவக பில்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
தங்க கோயிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு
தங்க கோவிலில் சுமார் 1, 700 கிலோ வெள்ளியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகாலட்சுமியே தரிசனம் செய்தார். பின்னர், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வைபவ லட்சுமி கோவிலில் சிறப்பு பூஜை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, தங்க கோயில் வளாகத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரக் கன்றுகளை நட்டு வைத்தார்.
பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்…
இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, வேலூரில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர் நகரம் மற்றும் தங்க கோயில் ஆகிய பகுதிகளில் சுமார் 1, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் வருகைக்காக வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் 2 அடுக்கு பாதுகாப்பை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் சானிடரி நாப்கின்.. ரூ.4000 கோடி செலவு.. பட்ஜெட்டை காரணம் காட்டி மறுத்த தமிழக அரசு!!