ஓடும் ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை…போலீஸ் ஏட்டு மீது அதிரடி நடவடிக்கை!
Police Man Suspended For Sexually Harassing Student: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது .

மாணவிக்கு தொல்லை கொடுத்த ஏட்டு சஸ்பெண்ட்
சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது. அதில், ஒரே பெட்டியில் சட்டக் கல்லூரி மாணவியும், பொது மக்களும் பயணம் செய்துள்ளனர். அப்போது, ரயிலானது காட்பாடி அருகே சென்ற போது, திடீரென சட்டக் கல்லூரி மாணவிக்கு ஒரு நபர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இந்தச் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். பின்னர் இது குறித்து ரயில்வே போலீசாரின் காவல் எண்ணுக்கு புகார் அளித்தார். அதன் பேரில், ரயிலானது அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வந்த போது, ரயில்வே போலீசார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கோவையில் ஏட்டாக பணிபுரியும் நபர்
இதில், ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் ஷேக் அப்துல்லா என்பதும், அவர் கோவை மாவட்டம், ஆர். எஸ். புரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர், சென்னைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு மீண்டும் கோவை திரும்புவதற்காக ரயிலில் பயணம் செய்துள்ள போது, சட்டக் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை…நெல்லை நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு
பின்னர் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டக் கல்லூரி மாணவி எடுத்த வீடியோவின் அடிப்படையிலும், ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும், ஷேக் அப்துல்லா மீது குற்றம் சாட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏட்டு ஷேக் அப்துல்லா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.
சென்னையில் நடைபெற்ற சம்பவம்
தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த வெளி மாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
வேலியை பயிரை மேய்ந்த கதை
இந்த சம்பவத்தில், சாலையில் சென்ற பொது மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ரோந்து போலீசார் வேகமாக செயல்பட்டு அந்த பெண்ணை மீட்டிருந்தனர். இதே போல, பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல் துறையை சேர்ந்த ஒருவர் ஓடும் ரயிலில் சட்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அரசு வால்வோ குளிர்சாதன சொகுசு பேருந்து…பல்வேறு வசதிகள்…டிக்கெட் கட்டணம்…முழு விவரம் இதோ!