6வது நாளாக நடந்த செவிலியர்கள் போராட்டம்.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!!
750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும் என்று உறுதியளித்தார். அதோடு, காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பொங்கலுக்கு முன் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, டிசம்பர் 24: பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொகுப்பூதிய செவிலியர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில், கடந்த 18ஆம் தேதி முதல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற செவிலியர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனால், போலீசார் அவர்களை கைது செய்து, இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்று இறக்கி விட்டனர். அவர்கள் அங்கும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் படிக்க: வீடற்றோர்களுக்கு இரவு நேர காப்பகம்.. 15 அத்தியாவசிய பொருட்கள் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
செவிலியர்கள் போராட்டம்:
தொடர்ந்து, அவர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் (டிசம்பர் 22) ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்ந்தபோது, மீண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், 750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும் என்று உறுதியளித்தார். அதோடு, காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பொங்கலுக்கு முன் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை:
கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 செவிலியர்களுக்கு தொகுப்பூதிய பணியிடங்கள் உருவாக்கி தரப்படும், தொகுப்பூதிய செவிலியர்கள் வைத்த சம்பளத்துடன் கூடிய 1 வருட மகப்பேறு விடுப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். எனினும், செவிலியிர்கள் தரப்பில் இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.
6வது நாளாக தொடர்ந்த போராட்டம்:
இதனால், நேற்று (டிசம்பர் 23) 6வது நாளாக போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு, “8,322 செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கும் வரை போராட்டம் தொடரும்” என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனிடையே, அங்கிருந்த கழிப்பறைகள் மூடப்பட்டதால், அருகே உள்ள நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளகழிப்பறைகளுக்குச் சென்றுவிட்டு, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த 300-க்கும் மேற்பட்ட செவிலியர்களை வழிமறித்து போலீஸார் கைது செய்தனர்.
வெவ்வேறு இடங்களில் இறக்கிவிடப்பட்டனர்:
பின்னர், அவர்கள் பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டு, மாலை விடுதலை செய்யாமல் பேருந்துகளில் ஏற்றி, வெவ்வேறு பகுதிகளில் இறக்கி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலர் சுபின் கூறியதாவது, அரசு பல்வேறு வழிகளில் எங்களை அடக்க முயற்சிக்கிறது. ஆனால், எங்கள் போராட்டம் தொடரும். கழிப்பறைக்குச் சென்றவர்களையும் மடக்கி கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..
சில இடங்களில் கழிப்பறை கதவைத் தட்டியும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் சொந்த ஊர் கேட்டும், பதில் கிடைக்காததால் பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டுள்ளனர். எவ்வளவு தடை செய்தாலும் எங்கள் போராட்டம் நிற்காது என்றார்.