சென்னையில் பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த மாணவனால் பரபரப்பு – என்ன நடந்தது?
Student Drug Scare : சென்னையில் மாணவர் ஒருவர் பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆசிரியர் அளித்த தகவலின் பெயரில் பள்ளிக்கு வந்த காவல்துறையினர் கஞ்சா பொட்டலத்தைக் கைப்பற்றி மாணவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 3 : சென்னையில் (Chennai) உள்ள ஒரு அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்த மாணவன் கஞ்சா பொட்டலத்துடன் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பிப்ரவரி 2, 2026 அன்று பள்ளி நேரத்தில், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்துள்ளார்களா என்பதை அறிய ஆசிரியர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குறிப்பிட்ட மாணவன் தனது இடுப்பில் சந்தேகத்துக்கிடமான பொருளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த மாணவனால் பரபரப்பு
அவரை தீவிரமாக பரிசோதனை செய்த போது, அந்த மாணவனிடம் இருந்து கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தலைமை ஆசிரியை, மாணவனிடமிருந்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, இது குறித்து உடனடியாக எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதையும் படிக்க : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. தமிழக அரசு எச்சரிக்கை
மாணவன் சொன்ன அதிர்ச்சி தகவல்
தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்து, கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றியதோடு, மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சிறுவன் பள்ளிக்கு வரும் வழியில் சாலையில் கிடந்த கஞ்சா பொட்டலத்தை எடுத்து கொண்டு வந்ததாகவும், அது என்ன பொருள் என்பது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவன் சிறுவன் என்பதால், விசாரணைக்கு பின்னர் அவரை பெற்றோரை அழைத்து அவர்களிடம் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதே நேரம் கஞ்சா பொட்டலம் கிடந்ததாக மாணவன் தெரிவித்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க : அண்ணா நினைவு நாள்.. சென்னையில் அமைதிப் பேரணி சென்ற முதல்வர் ஸ்டாலின்..
இந்த சம்பவம், பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருட்களின் பயன்பாடு தொடர்பான அபாயம் அதிகரித்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மாணவர்களை பாதுகாக்கவும், போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கவும், பெற்றோர்களும் பள்ளி நிர்வாகங்களும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.