Omni Bus: ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை-திருநெல்வேலி போன்ற வழித்தடங்களில் கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.4000 வரை உயர்ந்துள்ளது. இது குறித்துப் புகார் அளிக்க போக்குவரத்துத் துறை சிறப்பு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

ஆம்னி பேருந்து
தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பயணிகள் புகாரளிக்கும் வகையில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொலைதூர பேருந்து சேவையில் தனியார் பேருந்துகளான ஆம்னி பஸ்களின் சேவை மிக முக்கிய பங்கை வகிக்கிறது. சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும். வெளி மாநிலங்களுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகளில் சாதாரண இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளும், இருக்கை வசதி மட்டும் கொண்ட பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாட்களில் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் பெரிய அளவில் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் அதில் கட்டணமானது வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல சாதாரண நாட்களில் படுக்கை வசதி கொண்ட பேருந்து இருக்கை கட்டணம் ரூ.800 முதல் ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் தீபாவளி விடுமுறைக்கு அறிவிக்கப்பட்ட கட்டணமானது ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை உள்ளது.
இதே போல் மற்ற ஊர்களுக்கும் பேருந்து கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து பயணிகள் புகார் அளிக்க போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரையிலான தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சரக இணை போக்குவரத்து ஆணையர்கள் மற்றும் துணை போக்குவரத்து ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்களை பணியமர்த்தி தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது உரிய வரி மற்றும் வாகன ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டால் உடனடியாக பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அரசு பேருந்துகள் சுங்கச்சாவடிகளை விரைவாக கடந்து செல்ல தனி வழி அமைத்து சீரான போக்குவரத்தை சுங்கச்சாவடி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்க வேண்டிய எண்கள்
- சென்னை (ஆணையர்) – 1800 425161
- சென்னை வடக்கு (இணை ஆணையர்) – 9789369634
- சென்னை (தெற்கு) – 936134 1926
- மதுரை- 9095366394
- கோயம்புத்தூர்- 9384808302
- விழுப்புரம்- 9677398825
- வேலூர்- 98400230118
- சேலம்- 7845636423
- ஈரோடு- 9994947830
- திருச்சிராப்பள்ளி- 9066032343
- விருதுநகர்- 9025723800
- திருநெல்வேலி- 9698118011
- தஞ்சாவூர் – 9585020865