“செவிலியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Minister Ma.subramanian assures: பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிமணியனுடன் இன்று பேச்சுவார்த்தை நடந்தது.

மா.சுப்பிரமணியன்
சென்னை, டிசம்பர் 22: 750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி தெரிவித்துள்ளார். அரசின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிமணியனுடன் சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், என்ன நடந்தது என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க : திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!
டிச.18ல் தொடங்கிய செவிலியர் போராட்டம்:
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 18ம் தேதி, சென்னை சிவானந்தா சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற செவிலியர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனால், போலீசார் அவர்களை கைது செய்து, இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்று இறக்கி விட்டனர். அவர்கள் அங்கும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
5வது நாளாக நீடிக்கும் போராட்டம்:
இதையடுத்து, சங்க நிர்வாகிகளுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அதில், உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து, அவர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, இன்று ஐந்தாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இரவில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சில செவிலியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செவிலியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்:
இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை செவிலியர் சங்கங்களைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும் என்று உறுதியளித்தார்.
அதோடு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டிய அவர், காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பொங்கலுக்கு முன் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் படிக்க: தவெக குறித்த கேள்வி…விமர்சிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!
அதோடு, கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 செவிலியர்களுக்கு தொகுப்பூதிய பணியிடங்கள் உருவாக்கி தரப்படும், தொகுப்பூதிய செவிலியர்கள் வைத்த சம்பளத்துடன் கூடிய 1 வருட மகப்பேறு விடுப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.