அரசு ஊழியர்கள்.. செவிலியர்கள்.. தொடர் போராட்டங்களால் திணறும் அமைச்சர்கள்.. என்ன நடக்குது?
Negotiations With Striking Nurses, Govt Employees: தமிழகத்தில் போராட்டம் அறிவித்துள்ள அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த செவியர்கள் ஆகியோருடன் துறை அமைச்சர்கள் இன்று திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் .
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 22) ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருடன் பொதுப் பணித் துறை எ. வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டம் பயனாக இல்லை எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2021 திமுகவின் தேர்தல் அறிக்கையில்
இதனிடையே, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4.5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக குழு அமைக்கவில்லை. எனவே, இதனை கண்டித்து ஜாக்டோ ஜியோ மற்றும் அரசு ஊழியர்கள் ஜனவரி 6- ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: கிறிஸ்துமஸ் விடுமுறை – தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?




5 நாள்களாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்
இதேபோல, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், கடந்த 2015- ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுமார் 8000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ரூ. 18 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் நிலையில், இதே பணியை மேற்கொள்ளும் நிரந்தர செவிலியர்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை
எனவே, நீதிமன்ற உத்தரவுபடி, சம வேலைக்கு சம ஊதியம் என்பதன் அடிப்படையில் தங்களது ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திங்கள் கிழமை (டிசம்பர் 22) பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
திணறும் துறை சார்ந்த அமைச்சர்கள்
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தங்களது கோரிக்கைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என கூறி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது, ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும், சிலர் தூண்டிவிட்டு நடைபெறுவதாகவும் அமைச்சர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால், துறை அமைச்சர்கள் திணறி வருகின்றனர்.
மேலும் படிக்க: தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு.. பயணிகள் ஷாக்!!