Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!

Rain in tamilnadu: வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா என்பது குறித்து அதன் நகர்வுகளை வைத்தே கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!!
மழை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 Oct 2025 14:50 PM IST

சென்னை, அக்டோபர் 31: வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு மியான்மர் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.  அதோடு, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் நவ.2ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

அதேசமயம், வங்கக்கடலைப் போல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்குவடமேற்குத் திசையில் நகர்ந்து புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அரபிக்கடலிலும் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. அதோடு, கிழக்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Also read: கரையை கடந்த தீவிர புயல்.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. . அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வடக்கிழக்கு பருவமழையானது இந்தாண்டு வழக்கத்தை விட முன்பாகவே தொடங்கியது. தொடர்ந்து, வங்கக்கடலில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு உருவானது. அதில் ஒன்று ‘மோன்தாபுயலாக உருமாறி ஆந்திரா அருகே கரையைக் கடந்தது. இந்த மோன்தா புயல் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. எனினும், தமிழகத்தின் இதர பகுதிகளில் மழையின்றி, அதிக வெப்பமே காணப்பட்டது.

அக்டோபர் மாதத்தில் இயல்பை விட கூடுதல் மழை:

எனினும், அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை, இயல்பைவிடக் கூடுதலாக 36% மழை பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அக்டோபர் 1 முதல் 31ஆம் தேதி வரை இயல்பாக 171 மி.மீ மழைப் பதிவாகும். ஆனால், இந்தாண்டு அக்டோப் 1 முதல் 31 வரை 233 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.