நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்!!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, பாஜக மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நயினார் நாகேந்திரன்
சென்னை, நவம்பர் 25: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது சுற்றுப்பயணம் குறித்து பாஜக தலைமை அவரிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயினார் நாகேந்திரன் கடந்த ஏப்ரல் 12, 2025ம் தேதி தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையிடம் இருந்து அந்த பதவி பறிக்கப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும், அதுவும் ஊழல் கட்சி தான் என அவர் தொடர்ந்து முழங்கி வந்ததே பதவி பறிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.
மேலும் படிக்க: நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..
பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி:
தொடர்ந்து, அண்ணாமலை நீக்கப்பட்டதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மீண்டும் ஐக்கியமானது. அப்போது தமிழகம் வந்த அமித்ஷா 2026 தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை உறுதிசெய்தார். அதோடு, எடப்பாடி பழனிசாமியால் தான் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டாரா? என அவரிடம் செய்தியாளர்கள் அப்போது கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமித்ஷா, “அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகே அதிமுக கூட்டணிக்கு வந்ததாக கூறுவதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.
இபிஎஸ் தலைமையில் கூட்டணி:
அதோடு, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் கூறிச்சென்றார். அதன்பின், தமிழகத்தில் நியினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக இயங்கி வந்தது. அண்ணாமலை அவ்வப்போது செய்திகளில் காணப்பட்டு வந்தார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் விலகல்:
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் விலகினர். அதோடு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைதான், தங்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்ததாகவும், அவர் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியான ஒன்றுதான் எனவும் கூறியிருந்தனர். அதோடு, நயினார் நாகேந்திரன் தங்களுக்கு உரிய மரியாதை, முக்கியத்துவம் வழங்கவில்லை, அவருக்கு கூட்டணி கட்சியினரை சரியாக கையாளத் தெரியவில்லை என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அண்ணாமலை தலைமைக்கே விருப்பம்:
அதேபோல், அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது அக்கட்சி எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயை இருந்தது. அதுமட்டுமல்லாமல், அண்ணாமலையை பார்த்து பல இளைஞர்கள் கட்சியில் இணையும் சூழலும் உருவானது. ஆனால், அவர் பதவியில் இருந்த சென்ற பின்பு, அக்கட்சியின் செயல்பாடுகள் பெரியளவில் வெளியில் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், நயினார் நாகேந்திரன் அனைத்து விவகாரங்களிலும் நிதானத்தை கடைப்பிடிப்பதாகவும், சமநிலையான அவரது அணுகுமுறை கட்சியில் அமைதியை உருவாக்கியதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பு கூறிவந்தது.
மேலும் படிக்க: உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!
நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்:
இந்நிலையில்,’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நயினார் நாகேந்திரன் திடீரென அவரது சுற்றுப்பயணத்தை 4 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார். அதோடு, அவசரமாக பாஜக தலைமையை சந்திக்க அவர் டெல்லியும் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விசாரித்தபோது, அவரது சுற்றுப்பயணம் குறித்து மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை என பாஜக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. அதனால், அவருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க டெல்லி அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.