திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல முயன்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்.. பெரும் பரபரப்பு!
Thiruparankundram : ரம்ஜான் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு தொழுகை நடத்த சென்ற இஸ்லாமியர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்
தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, மலை மீது செல்வதற்கு ஒவ்வொருவரும் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இஸ்லாமியர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரம்ஜான் பண்டிகையான இன்று ஆண்டு தோறும் அமைதியான வழியில் தொழுகை நடத்தி வரும் எங்களை ஒவ்வொருவராக மலை மீது அனுமதிப்பது ஏன் என போலீசாரிடம் இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்பினர். போலீசாரின் இத்தகைய செயலுக்கு இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு ஆபத்தானது
மேலும், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு ஒவ்வொருவராக அனுப்ப முயற்சி மேற்கொள்வதை ஏற்க முடியாது. மேலும், பண்டிகை காலங்களில் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்று இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
மேலும் படிக்க: அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்த திருப்பரங்குன்றம் தொகுதி.. அதிமுகவின் கோட்டை.. இந்த முறையும் வெற்றி கிடைக்குமா?
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிக்கை
இந்த உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நடைமுறைபடுத்தவில்லை. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில், திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் தீபம் ஏற்ற வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு விசாரணை
மேலும், இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சரியானது என்று தீர்ப்பளித்திருந்தனர். மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை உயர்நீ மன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அண்மையில் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்திருந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை.. தலைவர்கள் வாழ்த்து..