கோயில் நிதியை கல்லூரிக்கு செலவு செய்வதில் என்ன தவறு.. அறநிலை கல்லூரி விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் கருத்து..
MP Karti P Chidambaram: அறநிலை கல்லூரி விவகாரம் தற்போது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில், கோயில் நிதியில் இருந்து கல்லூரிக்கு செலவு செய்வது தவறில்லை, சொல்லப்போனால் கல்லூரிகளுக்கு தான் கோயிலை விட அதிக செலவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 11, 2025: அறநிலை துறை கல்லூரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தற்போது ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது தான் பழனி கோயில் டிரஸ்டியாக இருந்ததாகவும், பழனி கோயிலே கல்லூரி நடத்தியதாகவும், டிரஸ்ட் பணத்திலிருந்து கல்லூரிக்கு செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கல்விக்காக கோயில் நிதியை செலவு செய்வதில் எந்த தவறும் இல்லை, தவறு என சொல்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜூலை 7 2025 அன்று கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில், தொடங்கிய இந்த சுற்றுப்பயணம் ஜூலை 21 2025 அன்று நிறைவடைகிறது. தினசரி பல்வேறு தொகுதிகளில் மக்களை சந்தித்து சாலை வளம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிரச்சார பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது ” கோயிலை கண்டாலே திமுகவினருக்கு கண் உறுத்துகிறது. கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் எந்த விதத்தில் இது நியாயம். அரசு பணத்தில் இருந்த கல்லூரி கட்ட வேண்டியதுதானே. மக்கள் இதை சதி செயலாக தானே பார்க்கின்றனர் ” என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் சேகர் பாபு சொன்ன விளக்கம்:
ஆனால் இதற்கு திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இது தொடர்பாக பேசுகையில், திமுக ஆட்சி காலம் பொறுப்பேற்றதும் ரூபாய் 130 கோடி செலவில் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக், ஒன்பது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் 22,450 மாணவர்கள் இந்து சமய அறநிலைத்துறையின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்கின்றனர். மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள்தான் அதிகம் பயன் பெறுகின்றனர்” என தெரிவித்திருந்தார்.
Also Read: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கியது யாகசாலை பூஜைகள்… ஜூலை 14-ல் கும்பாபிஷேகம்
அறநிலைத்துறை சட்டம் சொல்வது என்ன?
அதேபோல் இந்து சமய அறநிலைத்துறையின் சட்டத்தின்படி பள்ளிகளையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தொடங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கூட இந்த சமய அறநிலைத்துறை சார்பில் கல்வி நிலையங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. இதனை சதி செயல் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில் அப்போது அதிமுக செய்ததும் சதி செய்யலாம் என கேள்வி எழுப்பு இருந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலடி:
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், ” இதுவரைக்கும் பாஜகவிற்கு டப்பிங் வாய்ஸ் தான் பேசி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இப்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் ஆக பேச ஆரம்பித்து விட்டார். அறநிலைத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்கலாம் என இருக்கிறது. இது கூட தெரியாமல் எப்படி தான் முதலமைச்சர் ஆக இருந்தீர்களோ எனக்கு தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read: மீனவர்களின் படகுகளில் “தமிழக வெற்றிக் கழகம்” என எழுதியதற்காக மானியம் மறுப்பு? – விஜய் கண்டனம்
கோயில் நிதியை கல்லூரிக்கு செலவு செய்வதில் என்ன தவறு?
தற்போது இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தான், பழனி கோயில் டிரஸ்டியாக இருந்ததாகவும், பழனி கோயிலில் கல்லூரி இருந்ததாகவும், அந்த டிரஸ்டில் இருந்து தான் கல்லூரிக்கு பணம் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கல்விக்கு கோயில் நிதியை பயன்படுத்துவது தவறு என்று சொன்னால் என்ன சொல்வது, நியாயமாக பார்க்க போனால் கோயில்களை விட கல்விக்கு தான் அதிகப்படியான செலவு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்