தமிழகத்தில் கிறிஸ்துமஸ் அன்று மழைக்கு வாய்ப்பு – எங்கு தெரியுமா? வெளியான அப்டேட் இதோ
Weather Update: தென்மேற்கு வங்கக்கடல் அருகே வளிமண்டலத்தின் கீழ்மட்ட சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 21: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு, புதுச்சேரி (Puducherry) மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் மழை பெய்யும் என வானிலை நிலவரம் குறித்து விரிவான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் அருகே வளிமண்டலத்தின் கீழ்மட்ட சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 22 முதல் 24, 2025 அன்று தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தில் மழைக்கு வாய்ப்பு
வருகிற டிசம்பர் 25, 2025 கிறிஸ்துமஸ் தினத்தன்று, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “சென்னை புத்தக கண்காட்சி”.. ஜன.8ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!
மேலும், டிசம்பர் 26 மற்றும் 27, 2025 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை காட்டிலும் குளிர் அதிகம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வெப்ப நிலையை பொறுத்தவரை, டிசம்பர் 21, 2025 முதல் 25, 2025 தேதி வரை நான்கு நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இருப்பினும், சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 21, 2025 இன்று இரவும் நாளையும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. அதிகப்படியான குளிர் இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..
சென்னை வானிலை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 21, 2025 இன்று வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் ஒரு இரண்டு இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.