Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரைவில் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

SIR: வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டவர்கள், புதிய முகவரிக்கு குடியேறியவர்கள், அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிட்டு இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று 6ஆம் எண் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடமும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரைவில் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர் பட்டியல்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Dec 2025 07:41 AM IST

சென்னை, டிசம்பர் 21: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை வசதியாக்கும் நோக்கில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (எஸ்ஐஆர்) ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் மொத்தமாக 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர். கடந்த மாதம் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியது. மாநிலத்தில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வந்தனர். இப்பணிகள் கடந்த டிசம்பர் 14ம் தேதியுடன் முடிவடைந்து, பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதையும் படிக்க : கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க தவெக திட்டம்… விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை!!

14 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை:

இதனிடையே, கடந்த 2011ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.50 கோடியாக இருந்தது. இந்நிலையில், 2025ல் தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இதன் மூலம் வாக்காளர் எண்ணிக்கையில் தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கும் கீழ் சென்றுள்ளதாக அரசியல் பிரமுகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

படிவம் 6 மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம்:

தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தால், படிவம் 6 மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் 2026 ஜனவரி 18ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதன்படி, பெயர் விடுபட்டவர்கள், புதிய முகவரிக்கு குடியேறியவர்கள், அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிட்டு இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று 6ஆம் எண் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்கள்) ஆகியோரிடமும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

விரைவில் சிறப்பு முகாம்:

இதற்காக இந்த மாதமும், ஜனவரி மாதமும் இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒரு தேர்தல் அதிகாரி கூறும்போது, “சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி 18க்கு முன்பான ஏதாவது ஒரு சனி – ஞாயிற்றுக்கிழமையிலும் சிறப்பு முகாம் நடைபெற வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க : அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?

18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் பெயர் சேர்க்கலாம்:

01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்களும் பெயர் சேர்க்க மனு அளிக்கலாம். முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கும் அதற்கான படிவங்களை சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முதற் எழுத்து (Initial), முகவரி போன்ற விவரங்கள் சரியாக பொருந்தினால்தான் அந்த விண்ணப்பம் ஆன்­லைனில் ஏற்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.