MDMK: முற்றும் மோதல்.. மல்லை சத்யாவுக்கு வைகோ நோட்டீஸ்..!

Mallai Sathya - Vaiko: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் மல்லை சத்யாவுக்கு, கட்சி விவகாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக வைகோ பெயரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்கள் விளக்கமளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

MDMK: முற்றும் மோதல்.. மல்லை சத்யாவுக்கு வைகோ நோட்டீஸ்..!

மல்லை சத்யா - வைகோ

Updated On: 

20 Aug 2025 07:01 AM

தமிழ்நாடு, ஆகஸ்ட் 20மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்தது குறித்து விளக்கம் அளிக்க அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு வைகோ பெயரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட கழகம் கட்சி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அக்கட்சியில் ஆரம்பம் காலம் தொட்டே செயல்பட்டு வருபவர் மல்லை சத்யா. வைகோவுக்கு அடுத்தப்படியாக மல்லை சத்யா தான் இருக்கும் அளவுக்கு மதிமுகவில் அவரது செல்வாக்கு இருந்தது. வைகோவின் வலதுகரமாக இருந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

துரை வைகோ எண்ட்ரீ 

இப்படியான நிலையில் 2021 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் வைகோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சமயத்தில் அவரது மகன் துரை வைகோ கட்சிக்குள் எண்ட்ரீ கொடுத்தார். அவர் தற்போது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். கட்சியில் தலைமை கழக பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். துரை கட்சிக்குள் வருகை தந்த சில மாதங்களிலேயே அடுத்தடுத்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நடைபெற தொடங்கியது.

Also Read: ராஜினாமா முடிவை திரும்ப பெற்றது ஏன்..? மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விளக்கம்!

குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் மல்லை சத்யா – துரை வைகோ இடையே கடுமையான கருத்து மோதல் நிலவியது. வைகோவுக்கு அடுத்த இடத்தில் அவர் இருப்பதை துரை வைகோ விரும்பவில்லை என சொல்லப்படும் நிலையில் இருவரையும் வைகோ முன்னின்று சமாதானம் செய்து வைத்தார்.

மல்லை சத்யா மீது குற்றச்சாட்டு

எல்லாம் கொஞ்ச காலம் என்பது போல மல்லை சத்யா கட்சிக்கு துரோகம் செய்வதாக வெளிப்படையாகவே வைகோ தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியில் இருந்து வெளியேறியவர்களுடன் அவர் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துரோகி என சொல்வதற்கு பதில் விஷம் வாங்கி கொடுத்திருக்கலாம் என மல்லை சத்யா கூறியிருந்தார். மல்லை சத்யா – வைகோ – துரை வைகோ என மோதல் உச்சக்கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படாமல் இருந்தது.

Also Read: பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. மதிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம்.. துரை வைகோ வருத்தம்!

இந்த நிலையில் தான் துரை வைகோ பாஜகவோடு தொடர்பு வைத்து மத்திய அமைச்சராக நினைக்கிறார் என மல்லை சத்யா குற்றம் சாட்டினார். வைகோ திமுகவுடனும், துரை பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என அவர் சொன்னது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. கடந்த 2025 ஆகஸ்ட் 2ம் தேதி மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்டு மல்லை சத்யா உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆங்காங்கே மல்லை சத்யா ஆதரவாளர்களும் மதிமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

வைகோ பெயரில் நோட்டீஸ்

இந்நிலையில் மதிமுக குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்தது தொடர்பாக மல்லை சத்யாவுக்கு வைகோ பெயரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 15 நாட்களுக்குள் விளக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.