பர்வதமலையில் ஏறும்போது ஏற்பட்ட வலிப்பு – தவறி விழுந்த பக்தர் மரணம் – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலையில் பக்தர் ஒருவர் ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நிலை தடுமாறிய அவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது மரணம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை (Thiruvannamalai) மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலை சிவன் கோவில் மிகவும் பழமையான மற்றும் புனிதமான கோவில்களில் ஒன்று. இந்த மலையில் மல்லிகார்ஜுனர் என்ற சிவனும் பிரம்மாம்பிகை என்ற அம்மன் சந்நிதியும் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி வாய்ந்த இந்த மலைக்கு ஆண்டுதோறும் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த மலை ஏறுவதற்கு மிகவும் கடினமான மலை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்டோபர் 4, 2025 அன்று இங்கு வந்த பக்தர் ஒருவர் மலையேறும்போது தவறி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது மற்ற பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பர்வத மலையில் இருந்து தவறி விழுந்து பக்தர் மரணம்
தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 4, 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு பக்தர் ஒருவர் தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பழனிவேல். 46 வயதாகும் இவர் மலையில் ஏணிப்படிக்கட்டு வழியாக ஏறியிருக்கிறார்.
இதையும் படிக்க : பிரேக் அப் செய்த காதலி.. ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்திய இளைஞர்.. செங்கல்பட்டில் ஷாக்
இந்த நிலையில் ஏறும்போது பாதி வழியில் இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மரணம் பர்வதமலைக்கு வந்த பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவருக்க ஏற்பட்ட சோகம்
இதே போல கடந்த ஜூலை, 2025ன் போது பெங்களூரு பெல்லாரி தேவி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் பர்வதமலைக்கு வந்து மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கீழே இறங்கி வரும்போது மனோஜ் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியிருக்கிறார். உடனடியாக மற்ற பக்தர்கள் அவரை கீழே கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அவரது நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : மது அருந்திய தகராறு.. கணவனை பானையால் அடித்து கொன்ற மனைவி
பர்வதமலை சுமார் 4,560 அடி உயரம் கொண்ட மலையாகும். இங்கு பெரும்பாலும் பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவர்.