மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்.. வைகோ அதிரடி அறிவிப்பு
கடந்த சில மாதங்களாகவே மதிமுகவில் துரை வைகோ - மல்லை சத்யா இருவரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனிடையே ஆகஸ்ட் 2ம் தேதி நியாயம் கேட்டு மல்லை சத்யா உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியிருந்தார். இப்படியான நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 20: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். தன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் முக்கிய தூணாக இருந்து வருபவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கும் வைகோவின் மகனான துரை வைகோவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் வைகோ மல்லை சத்யாவை துரோகி என விமர்சித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் அவர் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு ஒரு மாத்தையாவை போல எனக்கு மல்லை சத்யா இருக்கிறார் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மல்லை சத்யா கடுமையாக ஆட்சேபனம் தெரிவித்தார்.
மல்லை சத்யாவின் திட்டம்
துரை வைகோவின் எதிர்காலத்திற்காக மல்லை சத்யாவை வைகோ ஓரம் கட்டுகிறார் என அரசியல் உலகில் கருத்து எழுந்தது. ஆனால் மல்லை சத்யா மீது கட்சி ரீதியாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அதே சமயம் மல்லை சத்யா தானாகவும் கட்சியிலிருந்து வெளியேறாமல் இருந்தார். மேலும் தனது ஆதரவாளர்களை அவர் திரட்டி வருகிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. அந்த வகையில் 2025, செப்டம்பர் 15ஆம் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் முப்பெரும் விழா ஒன்றை காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நடத்தவிருக்கின்றனர். இதற்கான ஆலோசனை கூட்டமும் நிறைவடைந்துள்ளது.
Also Read: ராஜினாமா முடிவை திரும்ப பெற்றது ஏன்..? மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விளக்கம்!




இரு துருவமாக நிற்கும் தலைவர்கள்
அதே நாளில் தான் திருச்சியில் வைகோ தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது இப்படியான நிலையில் இரு துருவமாக மதிமுகவில் முன்னணி தலைவர்கள் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே கவலைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்குள் இப்படி நடக்கும் பிரச்சனைகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
Also Read: MDMK: முற்றும் மோதல்.. மல்லை சத்யாவுக்கு வைகோ நோட்டீஸ்..!
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா துரை வைகோ பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் மத்திய அமைச்சராகவும் ஆசை அவருக்கு இருப்பதாகவும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். ஆனால் இதுதொடர்பாக வைகோ தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மதிமுக துரை வைகோவை அடுத்தக்கட்ட தலைவராக அங்கீகரிக்க நினைத்தாலும், தொண்டர்கள் மல்லை சத்யா அளவுக்கு அவரை ஏற்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.