மதுரையில் நயினார் பரப்புரை.. கடும் நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி!
Nainar Nagendran Campaign : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2025 அக்டோபர் 12ஆம் தேதி மதுரையில் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கான அனுமதியை மதுரை காவல்துறை வழங்கியுள்ளது. மேலும், கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பரப்புரை உடனே ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

நயினார் நாகேந்திரன்
மதுரை, அக்டோபர் 08 : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரைக்கு நிபந்தனைகளுடன் மதுரை காவல்துறை அனுமதி வழங்கிள்ளது. 2025 அக்டோபர் 12ஆம் தேதி மதுரையில் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயணத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தொடங்கி வைக்க உள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுக்கு தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என அனைத்து கட்சிகளும் மாவட்ட வாரியாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஆளும் திமுகவை அகற்ற அதிமுக கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் தான் செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதனால், கட்சி பொதுக் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, கட்சி தலைவர்களின் பரப்புரைக்கு காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்து வருகிறது. அந்த வகையில், 2025 அக்டோபர் 12ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பரப்புரையை தொடங்க உள்ளார். பாஜகவின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பரப்புரையை மேற்கொள்கிறார். 2025 அக்டோபர் 12ஆம் நயினார் நாகேந்திரனின் பரப்புரையை பாஜக தேசிய தலைவர் நட்டா தொடங்கி வைக்க உள்ளார். இந்த பரப்புரை நெல்லையில் 2025 நவம்பர் 17ஆம் தேதி நிறைவடைகிறது. பரப்புரை தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்.
Also Read : திடீரென சிவி சண்முகத்தை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் பரபரப்பு விளக்கம்!
நயினார் பரப்புரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி
முதற்கட்டமாக மதுரையில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கான அனுமதியை அவர்கள் கோரினர். பாஜக சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் மாரி சக்கரவர்த்தி மனு அளித்தார். அந்த மனுவில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொள்ள கோ.புதூர் பேருந்து நிலையம், பழங்காநத்தம், சிம்மக்கல், அண்ணா நகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு உள்ளிட்ட 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி தருமாறு கேட்டனர்.
இதனை அடுத்து மதுரை அண்ணா நகரில் உள்ள அம்பிகா திரையரங்கம் அருகே பரப்புரை மேற்கொள்ள மதுரை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், சில நிபந்தனைகளையும் காவல்துறை விதித்துள்ளது. அதன்படி, நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும்.
Also Read ; ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?
கர்ப்பிணிகள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாது. சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்க கூடாது. கூட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுக்கள் இருக்க வேண்டும். அவசர தேவைக்கு தன்னார்வலர் குழு இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டால் பரப்புரை உடனடியாக ரத்து செய்யப்படும் என மதுரை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.