குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்…திறப்புக்கு நாள் குறித்த இஸ்ரோ தலைவர்!
Kulasekarapattinam Rocket Launch Site: குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம் 2027- ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும், இந்த ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் - 4 திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார் .

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திறப்பு தேதி
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் வந்திருந்தார். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ககன்யான் திட்டம் என்பது நாம் தயாரிக்கும் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, பின்னர் அவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் திட்டமாகும். இந்த திட்டத்துக்கான ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான அழுத்தம், வெப்பநிலை, ஆக்சிஜன், ஈரப்பதம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அமைப்பின் மேம்பாட்டு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
குரூப் எஸ்கேப் சிஸ்டம் பணிகள் முடிவு
இதே போல, ராக்கெட் ஏவப்படும் போது, அதில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்களின் உயிரை பாதுகாக்கும் வகையிலான “குரூப் எஸ்கேப் சிஸ்டம்” தொடர்பான பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடத்தி முடிப்பதற்காக சுமார் 8 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கலம் 2027- ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம்
இதற்கு முன்பாக மனிதர்கள் இல்லாத 3 பரிசோதனை ராக்கெடுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையத்தில் மொத்தம் 5 தொகுதிகள் உருவாக்கப்பட உள்ளன. முதல் தொகுதி அமைக்கும் பணிக்காக 2028- ஆம் ஆண்டில் ஒரு ராக்கெட் அனுப்பப்பட உள்ளது.
மேலும் படிக்க: கடன் தொல்லை.. ரூ. 1.50 கோடி மதிப்பு தங்கத்தை திருடியது ஏன்? சென்னை சம்பவ பின்னணி!
இந்தியாவின் 2-ஆவது ராக்கெட் ஏவுதளம்
இதற்கான ஒப்புதல் தற்போது, கிடைத்த நிலையில், இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதே போல பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் 2- ஆவது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இருக்கும்.
சந்திரயான் -4 திட்டம் செயல்படுத்த திட்டம்
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து சந்திரயான் -4 திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் ஏவப்பட்ட ராக்கெட் நிலவில் தரை இறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்ப கொண்டு வரும் வகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: எஸ்ஐஆர்-இல் மீண்டும் குளறுபடி…ஆள் இல்லாத கிராமத்தில் 800 பேர் இருப்பதாக பதிவு!