கரூர் விவகாரம்.. ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை!
Karur stampede update: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆனந்த், நிர்மல் குமார்
கரூர், அக்டோபர் 1: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கரூர் மாவட்ட செயலாளர், நகர செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டவுடன் ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் தனித்தனியாக முன் ஜாமீன் கோரியிருந்தனர். அதில் இந்த வழக்கில் தங்கள் பெயர்களை அரசியல் காரணங்களுக்காக சேர்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த வழக்கானது அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் தசரா விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் ; எந்த ஒரு கட்சித் தலைவரும் விரும்ப மாட்டார்…. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் தலைமறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களை கைது செய்யும் பணிகள் ஒருபுறம் வேகமெடுத்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
அதேசமயம் 8 பாஜக எம்பிக்கள் அடங்கிய குழுவும் நேற்று (செப்டம்பர் 30) கரூருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
விஜய் விளக்கம் – அரசியல் கட்சியினர் எதிர்ப்பு
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி கரூருக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்தார். மதியம் 12 மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பரப்பரை மேற்கொள்ளும் இடத்திற்கு மாலை 7 மணிக்கு தான் வந்து சேர்ந்தார். இதனிடையே அவர் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய நிலையில் அங்கிருந்து புறப்பட்டார்.
இதன் பின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அறிவித்தது. தமிழக வெற்றி கழகம் சார்பில் இரங்கல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் அறிவித்தார். இதனைத் தவிர பிரதமர் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CM சார்.. அவங்க மேல கை வைக்காதீங்க – வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
இந்த நிலையில் மூன்று நாட்களாக எந்தவித விளக்கமும் தராமல் இருந்த விஜய் நேற்று (செப்டம்பர் 30) திடீரென வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்தார். அதில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆறுதலை தெரிவித்த அவர் இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தார்.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தன் மீது ஏதாவது பழி வாங்கும் எண்ணம் இருந்தால் நேரடியாக தன்னிடம் காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய கருத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன.