தவெக போட்டியிடும் சின்னம் எது தெரியுமா? வெளியானது முக்கிய அப்டேட்…கட்சியினர் குஷி!
Election Commission Allotted Whistle Symbol To TVK: தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சின்னத்தை ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக கேட்ட சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியினர் மிகுந்த குஷியில் உள்ளனர்.

தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் அண்மையில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொது செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், ஆட்டோ ரிக்க்ஷா, மைக்ரோஃபோன், விசில் உள்ள 10 சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக டெல்லியில் முகாமிட்டிருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 2019- ஆம் ஆண்டு நடித்த பிகில் படத்துடனும், மக்கள் எளிமையாகவும், சுலபமாகவும் தொடர்பு படுத்தக்கூடியதாகவும், எளிதாக மக்களை சென்றடைய கூடிய வகையில் விசில் இருப்பதால் அதனை ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தவெக சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 சின்னங்கள்
இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 10 சின்னங்களில், 7 சின்னங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு கிடைக்கும் சின்னங்களாகும். மீதமுள்ள 3 சின்னங்கள் சுயமாக உருவாக்கப்பட்டதாகும். தற்போது, தமிழக வெற்றிக் கழகம் கேட்ட சின்னத்தை ஒதுக்குவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சித்து விளையாட்டை மேற்கொள்ளும் என்று பரவலாக பேசப்பட்டது.
மேலும் படிக்க: பாஜகவின் முகமூடியாக செயல்படும் சீமான்-விஜய்..சனாதனத்துக்கு ஆதரவானவர்கள்…தொல்.திருமாவளவன் தாக்கு!
தவெகவுக்கு விசில் சின்னம் உறுதி
ஏனென்றால், பொது சின்னங்களை கேட்பதற்கு முதலில் வரும் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒதுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சின்னத்தை தேர்வு செய்வதற்கு விஜயின் நெருங்கிய ஜோசியர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விசில் என்ற வார்த்தை பரவலாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழக்கப்பட்ட வார்த்தையாகும். மேலும், விசில் என்ற பொருளும் அனைத்து தரப்பினருக்கும் பழக்கப்பட்டதாகும்.
விசில் சின்னத்தை தேர்வு செய்ய காரணம் என்ன
மேலும், இது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் துல்லியமாக தெரிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கட்சியின் பெயர், கட்சியின் கொடி, அதன் தனித்துவம், வண்ணம் ஆகியவை பொது மக்களை எந்த அளவுக்கு சுலபமாக சென்று அடைகிறதோ, அதே பாணியில் வாக்காளர்களை சுலபமாக சென்றடையும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் விஜய் இந்த விசில் சின்னத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கேட்ட சின்னம் கிடைத்ததால் தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனராம்.
மேலும் படிக்க: தமிழ் தேசியத்தின் முதல் எதிரி திரைக்கவர்ச்சி…விஜய் மீது சீமான் மறைமுக அட்டாக்!