அழிவுப்பாதையில் அதிமுக.. “திமுகவில் பெரு மகிழ்ச்சியோட தொண்டனாக இணைந்துள்ளேன்”.. ஓபிஎஸ் பேட்டி

OPannerselvam joined in dmk: பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய் கழகமான திமுகவில் ஒரு தொண்டனாக தான் இணைந்து இருக்கிறேன். கழகத்தின் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

அழிவுப்பாதையில் அதிமுக.. திமுகவில் பெரு மகிழ்ச்சியோட தொண்டனாக இணைந்துள்ளேன்.. ஓபிஎஸ் பேட்டி

திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

Updated On: 

27 Feb 2026 11:27 AM

 IST

சென்னை, பிப்ரவரி 27: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் திரண்டு அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் திமுகவில் இணைந்தபோது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ஓ.ரவீந்திரநாத்தும் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதையும் படிக்க: திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.. இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா?

தாய் கழகத்தில் தொண்டனாக இணைந்துள்ளேன்:

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் பெருமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன். பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய் கழகமான திமுகவில் ஒரு தொண்டனாக தான் இணைந்து இருக்கிறேன். கழகத்தின் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அரசியலில் அண்ணா காட்டிய வழி, கலைஞர் காட்டிய வழியில் செயல்படும் முதல்வர் ஸ்டாலின், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செயல்படுகிறார்.

ஆணவப்போக்கோடு செயல்படுகிறார் இபிஎஸ்:

ஆணவப்போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எக்காலத்திலும் வெற்றி பெற முடியாது என்ற சூழலை உருவாக்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திமுகவில் தங்களை இணைந்துக்கொண்டுள்ளனர். அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்கிறார். தென் மாவட்டத்தில் இருந்து யாரும் தலைவராக வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருந்து, அனைத்து நிலைகளிலும் தென் மாவட்டங்களில் உள்ளவர்களை அழிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.

நாடே தளபதியை உற்றுநோக்கிறது:

நாடே தளபதியை உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மன மகிழ்ச்சியோடு வாழ்த்து வருகிறார்கள். பெண்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அண்ணாவைபோல் சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளிப்பவர். நான் முதல்வராக பொறுப்பேற்றபோது, ‘பச்சை தமிழன் பன்னீர்செல்வம்’ என என்னை பாராட்டினார் என்பதை நினைவுகூர்கிறேன் என்றார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தலைசிறந்த இயக்கமாக திமுக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்தே திமுகவில் இணைந்துள்ளேன். ஒரு தொண்டனாக திமுகவில் இணைந்துள்ள நான், இயக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்-க்கு முதல்வர் வரவேற்பு:

ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவுக்கு வருக வருக என வரவேற்பதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.

மேலும் படிக்க: திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி.. 35+2 கேட்டு காங்கிரஸ் பிடிவாதம்?..

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Follow Us
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?