ரிதன்யா வழக்கு: கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்த ஐகோர்ட்..!

Rithanya dowry death case: ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜாமீன் மனுவை திருப்பூர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு வழங்கி, விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ரிதன்யா வழக்கு: கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்த ஐகோர்ட்..!

ரிதன்யா

Updated On: 

26 Jul 2025 09:04 AM

திருப்பூர் ஜூலை 26: திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா (Rithanya from Tiruppur), வரதட்சணை (Dowry) காரணமாக கொடுமைப்படுத்தப்பட்டு விஷம் குடித்து தற்கொலை செய்தார். இறப்பதற்கு முன் தந்தைக்கு ஆடியோ பதிவு அனுப்பி, கணவர் கவின்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது குற்றச்சாட்டு வைத்தார். போலீசார் மூவரையும் கைது செய்தனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை (The bail application filed) திருப்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது. மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி, காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2025 ஜூலை 30-க்கு ஒத்திவைத்தார்.

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வசித்து வந்த ரிதன்யா என்ற 24 வயது இளம் பெண், இரண்டரை மாதங்களுக்கு முன்னர் கவின்குமாரை திருமணம் செய்திருந்தார். திருமணத்துக்குப் பிறகு, அவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தொடர்ச்சியாக வரதட்சணைக்காக மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை

இந்த மனவேதனை காரணமாக, கடந்த சில வாரங்களுக்கு முன், ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழப்பதற்கு முன் தனது தந்தைக்கு ஒரு ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார். அந்த பதிவில், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தான் தற்கொலை செய்யும் முக்கிய காரணங்கள் எனப் பேசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கணவர், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் கைது

இந்த புகாரை தொடர்ந்து, காவல்துறையினர் மூவரையும் கைது செய்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீனுக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த நீதிமன்றம், சம்பவத்தின் தன்மை, ஆதாரங்களின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த ஜாமீன் மனுக்களை நிராகரித்தது.

Also Read: 2 குழந்தைகளை கொன்ற அபிராமி.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. 

ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்த குடும்பத்தார்

இதன் பின்னர், மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ரிதன்யாவின் தந்தை தரப்பில், “இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படக் கூடாது” என்ற காரணங்களுடன் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

போலீசார் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

மீண்டும், காவல்துறை சார்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், ஜாமீன் மனுக்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, காவல்துறையிடம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை 2025 ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு, திருமணத்துக்குப் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணை சித்ரவதைகளின் தீவிரம், அதனால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. உயர் நீதிமன்றம் தொடர்ந்தும் இந்த வழக்கை கவனத்தில் எடுத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.