அண்ணா நகர் சிறுமி வழக்கு – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்
High Court questions Tamil Nadu government: சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அரசு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சென்னை, ஜனவரி 30 : சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அரசு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கை நினைத்தால் ஒரே நாளில் முடிக்கலாம், இல்லையெனில் 10 ஆண்டுகள் வரை நிலுவையில் வைத்திருக்கலாம் என அரசின் அணுகுமுறையை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கடுமையான கருத்துகளை தெரிவித்தனர். நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னையின் அண்ணா நகரில் நடந்த இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுமி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கீழ்பாக்கம் காவல்துறையினர், மருத்துவமனை வளாகத்திலேயே சிறுமியிடம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
இதையும் படிக்க : பிப்.5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை?




இதற்கிடையே, சிறுமியின் தாயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தாக்கியதாகவும், பின்னர் சிறுமியின் தந்தையையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் சமூக வலைதளங்களில் கசிந்தது பெரும் பரபரப்பையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 2024 அக்டோபரில் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு, விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, அதற்கு பதிலாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டது. இந்த குழு வாரந்தோறும் தனது விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து உயர்நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
நீதிமன்றம் கடும் கண்டனம்
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக, மேலும் மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு ஜனவரி 29, 2026 அன்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிக்க : நெஞ்சை உறைய வைத்த கொலை முயற்சி.. இதற்கு மேல் சட்டம் – ஒழுங்கு சீர்கெட முடியாது.. கொதித்த இபிஎஸ்..
இதனையடுத்து ஜனவரி 30, 2026 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீசார், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் ஆரம்ப விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என விளக்கம் அளித்தனர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள் தேவையான முக்கிய ஆவணங்களையும் அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என கடும் கண்டனம் தெரிவித்தனர். இது நீதிமன்றத்தின் செயல்பாட்டை பாதிக்கும் செயல் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், அரசு விரும்பினால் ஒரு வழக்கை ஒரே நாளில் முடிக்க முடியும். இல்லையெனில், 10 ஆண்டுகள் கடந்தும் வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியும் எனக் கூறிய நீதிபதிகள், போலீசார் வழங்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.