Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. உயர்நீதிமன்றம் வேதனை..

Chennai High Court: கடலூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் ஆணவக்கொலை அதிகரித்துள்ளதாக கூறிய நீதிபதி, துரதிருஷ்டவசமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆணவக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் வேதனை வெளிப்படுத்தினார்.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.. உயர்நீதிமன்றம் வேதனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Aug 2025 10:15 AM

சென்னை, ஆகஸ்ட் 5, 2025: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, மாணவரின் தந்தை எம்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்கு பின்னணி என்ன?

அதில், கல்லூரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவினர்கள், அடிக்கடி தனது மகனை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: கணவனின் சந்தேகத்தால் மனமுடைந்த பெண்.. திருமணமான இரண்டே மாதங்களில் விபரீத முடிவு!

வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி, குள்ளஞ்சாவடி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிபிசிஐடி நியாயமாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் ஆணவக்கொலை அதிகரித்துள்ளதாக கூறிய நீதிபதி, துரதிருஷ்டவசமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆணவக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் வேதனை வெளிப்படுத்தினார்.

நெல்லை ஆணவ்க்கொலை:

தமிழகத்தில் சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கவின் செல்வகணேஷ் என்ற 27 வயது இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதாவது வேறு சமூகத்தை சேர்ந்த கவின் தனது அக்காளை காதலித்து வந்ததால் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்ற சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அறிவாலால் வெட்டி சரமாரியாக கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடினார்.

மேலும் படிக்க: அதிகரிக்கும் சைபர் கிரைம்.. ஜூலையில் மட்டும் ரூ. 1.65 கோடி மீட்பு – சென்னை காவல் துறை தகவல்..

இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் மீது அதாவது சுர்ஜித், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுர்ஜிதின் தந்தையான சரவணனை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தாயார் கிருஷ்ணகுமாரி தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கவினின் காதலியான சுபாஷினி இடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்த வழக்கில் உயிரிழந்த கவினின் தந்தையான சரத்குமாரின் உயிருக்கு ஆபத்து இருக்கும் காரணத்தால் ஆயுதம் ஏந்திய போலீஸ், பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது